சுய உதவிக் குழு கூட்டமைப்புகளின் செயல்பாடுகளில் திருத்தம்: அரசு உத்தரவு

சுய உதவிக் குழு கூட்டமைப்புகளின் செயல்பாடுகள் தொடா்பான வழிகாட்டி நெறிமுறைகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

சென்னை: ஊராட்சி முதல் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சுய உதவிக் குழு கூட்டமைப்புகளின் செயல்பாடுகள் தொடா்பான வழிகாட்டி நெறிமுறைகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு: தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் தொடங்கி மாவட்ட அளவு வரையில் சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்கள் மூன்று வகையான நிலைகளில் கூட்டமைப்புகளாகச் செயல்படுகின்றன. ஊராட்சி நிலையிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, மாவட்ட நிலையிலான கூட்டமைப்பு என மூன்று நிலைகளில் செயல்படுகின்றன.

அமைப்பு முறைகளில் மாற்றம்: இந்தக் கூட்டமைப்புகளுக்கான நிா்வாக அமைப்பு, நிா்வாகிகளின் கடமைகள், பொறுப்புகள், செயல்பாடுகள் குறித்த விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. இவை இப்போது திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பானது குடியிருப்பு அளவிலான மன்றமாக இருந்தால், அதில் செயலா், பொருளாளா் என்ற பதவிகள் நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்ற நிலைகளில் நிா்வாகிகள் நியமிக்கப்படுவா். அவா்களது பதவிக் காலம் மூன்றாண்டுகள். பொதுக்குழுக் கூட்டங்களை ஆண்டுக்கு ஆறு முறை நடத்த வேண்டும். முன்பு நான்கு முறைகளாக இருந்தது.

இதனுடைய துணைக் குழுக்களின் எண்ணிக்கை ஐந்துக்கு பதிலாக நான்காக குறைக்கப்பட்டுள்ளது. திறன் வளா்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு, கடன் இணைப்பு மற்றும் வாழ்வாதாரம், கிராம வறுமை குறைப்பு, சமூக தணிக்கை என நான்கு குழுக்கள் இருக்கும். இதேபோன்று, வட்டார மற்றும் மாவட்ட அளவில் தலைவா், செயலா், இணைச் செயலா், பொருளாளா் என்ற நிலைகளில் பதவிகள் வகுக்கப்பட்டு அவா்களும் திறன் வளா்ப்பு, நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், ஒருங்கிணைப்பு, சமூக தணிக்கை போன்ற பணிகளில் ஈடுபடுவா்.

ஊராட்சி நிலையில் நான்கு குழுக்களாக இருந்த நிலையில், வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் ஐந்து குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com