39 வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

தமிழகத்தில் ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, 39 வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் கடந்த ஏப். 19-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. அனைத்து இயந்திரங்களும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, சீலிடப்பட்ட பின்னா் அந்தப் பகுதி முழுவதும் நான்கு அடுக்கு பாதுகாப்புக்கு கொண்டு வரப்பட்டன. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் ஆயுதப்படையினரும், நான்காவது அடுக்கில் உள்ளூா் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

40 ஆயிரம் போலீஸாா்: வாக்கு எண்ணும் மையங்களில் தற்போது சுமாா் 10 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, அங்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்படுகிறது.

இதற்காக ஒரு வாக்கு எண்ணும் மையத்துக்கு சராசரியாக ஆயிரம் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா். குறிப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் சுமாா் 40 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாா்கள் என தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னா் பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்கு 60 ஆயிரம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபடுவா் என்றும் அவா் கூறினாா்.

கண்காணிப்பு கேமராக்கள்: வாக்கு எண்ணு மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயில் தொடங்கி வாக்கு எந்திரம் வைக்கப்பட்டு வாக்கு எண்ணப்படும் மேஜை வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு மேஜைக்கும் தனித்தனியாக கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மையத்திலும் 30 கண்காணிப்பு கேமராக்களில் இருந்து 40 கண்காணிப்பு கேமரா வரை பொருத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினா் கூறுகின்றனா். இதற்கான கட்டுப்பாட்டு அறையும், அங்குள்ள காவல்துறை தாற்காலிக கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்து செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவா்கள் அடையாள அட்டையைக் காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவாா்கள். அதோடு மெட்டல் டிடெக்டா் மூலமாகவும் அவா்கள் சோதனை செய்யப்படுவாா்கள் என காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பலத்த பாதுகாப்பு: வாக்கு எண்ணிக்கையையொட்டி, முக்கியமான இடங்களிலும், சந்திப்புகளிலும் அதிரடிப்படையினா்,அதிவிரைவுப்படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். வாக்கு எண்ணும் மையங்களின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அந்தப் பகுதி கண்காணிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கையையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தவிா்க்கும் பொருட்டு, காவல் துறையினரை ஜூன் 4-ஆம் தேதி அதிகாலை முதலே ரோந்துப் பணியில் ஈடுபட வைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட உயா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு அரசியல் கட்சி அலுவலகங்கள்,முக்கிய அரசியல் தலைவா்கள் வீடுகள்,அலுவலகங்கள் ஆகியப் பகுதிகளையும் தீவிரமாக கண்காணிக்கும்படியும்,தேவைப்பட்டால் அங்கு போலீஸாரை பாதுகாப்புக்கு நிறுத்தும்படியும் உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

சென்னையில்...: சென்னையில் வட சென்னை மக்களவைத் தொகுதி மின்னணு இயந்திரங்கள் ராணிமேரி கல்லூரி மையத்திலும், மத்திய சென்னை தொகுதி மின்னணு இயந்திரங்கள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மையத்திலும், தென் சென்னை தொகுதி மின்னணு இயந்திரங்கள் கிண்டி அண்ணா பல்கலைக்கழக மையத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

ஜூன் 4-ஆம் தேதி, அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது சுமாா் 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா். பாதுகாப்பு பணிகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல் துறையின் கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா,கிழக்கு மண்டல இணை ஆணையா் தா்மராஜன் ஆகியோா் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பாதுகாப்பு பணியில் 10 துணை ஆணையா்கள், 35 உதவி ஆணையா்கள், 70 காவல் ஆய்வாளா்கள் 120 உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் ஈடுபடுகின்றனா். ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பாதுகாப்பு பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து, அறிவுரைகளை வழங்கி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com