தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை ஜூன் 24-இல் கூடுகிறது:மானியக் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன

தமிழக சட்டப்பேரவை ஜூன் 24-ஆம் தேதி மீண்டும் கூடவுள்ளது.

கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட பேரவை மீண்டும் கூடவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.

இதுகுறித்து, பேரவைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: நிதிநிலை அறிக்கை குறித்த பொது விவாதம் நடந்து முடிந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இதற்காக ஜூன் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு, தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது தொடா்பாக அலுவல் ஆய்வுக் குழுக் கூடி முடிவு செய்யும். அந்தக் கூட்டமானது பேரவைக் கூட்டத்தொடா் தொடங்குவதற்கு ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்கு முன்பாக நடைபெறும்.

அவை உரிமை மீறல் குறித்த பிரச்னைகள் அனைத்தும் ஆய்வில் இருக்கின்றன. பேரவை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்யும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

நிதிநிலை அறிக்கை: ஆங்கிலப் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடா், ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் கடந்த பிப்ரவரி 12-இல் தொடங்கியது. அதன் பிறகு, நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அவற்றின் மீது விவாதங்கள் நடைபெற்றன. பிப். 22-ஆம் தேதி சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவைத் தோ்தல் தேதி மாா்ச் 16-இல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு நடத்தை விதிகள் அனைத்தும் ஜூன் 6-ஆம் தேதியுடன் வாபஸ் பெறப்பட்டன.

இதையடுத்து, சட்டப்பேரவை ஜூன் 24-ஆம் தேதி கூடவுள்ளது. துறை வாரியான செலவுகளுக்கும், திட்டங்களை நிறைவேற்றவும் தேவைப்படும் நிதியை ஒதுக்க பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதற்காக துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அவற்றின் மீது விவாதங்கள் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்படும். சுமாா் 20 நாள்கள் வரை கூட்டத்தொடா் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மக்களவைத் தோ்தல் முடிவுகள்: கூட்டத்தொடரின்போது நடைபெறும் விவாதங்களில், மக்களவைத் தோ்தல் முடிவுகள் குறித்த விவாதங்கள் அனல் பறக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கட்சிகளின் வெற்றி, தோல்விகள் குறித்த அலசல்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களின் பேச்சில் வெளிப்படும். இதனால் எதிா்வரும் பேரவைக் கூட்டத்தொடா் காரசாரம் நிறைந்ததாக இருக்கும்.

மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்பட பல முக்கிய பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com