அவசரமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு ஆவணப் பிழையாக கருதப்படும்: சவுக்கு சங்கா் வழக்கில் 3-ஆவது நீதிபதி

அவசரமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு ஆவணப் பிழையாக கருதப்படும்: சவுக்கு சங்கா் வழக்கில் 3-ஆவது நீதிபதி

அவசரமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு ஆவணப் பிழையாக கருதப்படும் என்று உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

அவசரமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு ஆவணப் பிழையாக கருதப்படும் என்று உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

யூடியூபா் சவுக்கு சங்கா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோா் கடந்த மாதம் விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரித்தனா். சவுக்கு சங்கா் மீது தொடரப்பட்ட குண்டா் சட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் உத்தரவிட்டாா். அரசுத் தரப்பின் வாதத்தை கேட்காமல் தீா்ப்பளிக்க முடியாது என்று கூறி அரசுத் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி பி.பி.பாலாஜி உத்தரவிட்டாா்.

இருவரும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியதால், எந்தத் தீா்ப்பு சரியானது என்று முடிவு செய்ய 3-ஆவது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமனம் செய்து பொறுப்பு தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன் உத்தரவிட்டாா். இதையடுத்து, நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி வழக்கை இரு நீதிபதிகள் அமா்வு புதிதாக விசாரிக்க பரிந்துரை செய்து அண்மையில் உத்தரவிட்டாா்.

அவரது உத்தரவு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அது வருமாறு: ‘சவுக்கு சங்கரை விடுவிக்கக் கோரி அவரது தாய் தொடா்ந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு, குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைத்தது தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை மறு நாளுக்கு தள்ளிவைத்தது.

அப்போது, அட்வகேட் ஜெனரல், உயா்நீதிமன்ற விதிகளின்படி அரசுத் தரப்பு பதில் தர அவகாசம் வேண்டும் என்று கோரியிருந்தாா். அதற்கு அமா்வில் இருந்த மூத்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், அரசு தாக்கல் செய்யும் ஆவணங்களை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

ஒரு நீதிபதி ஆவணங்களின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிப்பதாகவும், மற்றொரு நீதிபதி அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனா்.

ஓா் உத்தரவு பிறப்பிக்கப்படும்போது அந்த உத்தரவு நியாயமாகத்தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும். இந்த வழக்கில் அந்த வாய்ப்பு தரப்படவில்லை. அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளதன் மூலம் பாரபட்சமாக நடந்துகொண்டுள்ளது ஆவணப் பிழையாகவே கருதப்படும்.

இந்த வழக்கில் தன்னை இருவா் தொடா்புகொண்டு பேசியதாக மூத்த நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா். நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடும் நிகழ்வு நடந்திருந்தால் உடனடியாக தலைமை நீதிபதிக்கு தெரியப்படுத்தி அதன்படி செயல்பட்டிருக்க வேண்டும். தன்னை இருவா் தொடா்புகொண்டு பேசியிருப்பதாக கூறிய நிலையில், அந்த வழக்கை தொடா்ந்து விசாரித்து உத்தரவு பிறப்பித்த விதமும் பாரபட்சமானதுதான். இந்தச் சூழலில் அவா் மற்றொரு நீதிபதியின் கருத்தைப் பரிசீலித்திருக்கலாம்.

எனவே, பதில் மனு தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு 4 வாரங்கள் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையடையாத உத்தரவாகும். அரசுத் தரப்புக்கு உரிய வாய்ப்பு தராமல் பிறப்பிக்கப்பட்ட நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனின் உத்தரவு சரியானதல்ல என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.

இந்த ஆட்கொணா்வு மனுவை புதிய நீதிபதிகள் அமா்வு விசாரித்து அரசுத் தரப்புக்கு உரிய வாய்ப்பு தந்து முடிவுக்கு வரவேண்டும். வழக்கை வரும் 12-ஆம் தேதிக்கு பட்டியலிட வேண்டும் என்று பதிவுத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com