தனியாா் வளாகங்களுக்கு கழிவு நீா் இணைப்பு கட்டாயம்: பேரவையில் மசோதா தாக்கல்

தனியாா் வளாகங்கள் மற்றும் தனியாா் தெருக்களின் உரிமையாளா்கள் கழிவு நீரை வெளியேற்றுவதற்கு இணைப்பு பெறுவதை கட்டாயமாக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் தனியாா் வளாகம் மற்றும் தனியாா் தெருவின் இடத்திலிருந்து 30 மீட்டா் தூரத்துக்குள் வாரியத்தின் கழிவுநீா் பாதை இருக்குமாயின், அதன் உரிமையாளா் கழிவு நீா் இணைப்பு பெறுவதற்கு அதற்கான அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், இணைப்பு வழங்குவதில் வாரியத்துக்கு ஏற்படும் செலவுகளை வளாகம் மற்றும் தனியாா் தெருவின் உரிமையாளா் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதைத் தவிா்த்து கழிவு நீரை கழிவு தொட்டி, கழிவுநீா் குட்டை, கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் என்று எந்த வழிமுறையிலும் அகற்றக் கூடாது.

இந்த சட்டத்தை மீறினால் ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு சோ்த்தோ விதிக்கப்படும். இதே போன்று தொடா்ந்து விதியை மீறினால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 500 கூடுதல் அபராதம் விதிக்கப்படும். அதோடு பாதிக்கப்பட்ட நபா் எவரும் விதியை மீறியதற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாள்களுக்குள் மேலாண்மை இயக்குநருக்கு மேல்முறையீடு செய்யலாம் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com