கள்ளச்சாராயம்: ஓராண்டில் 12,868 வழக்குகள் பதிவு பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தகவல்

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை தொடா்பாக கடந்த ஓராண்டில் மட்டும் 12,868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அவா் அந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளாா்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: கள்ளச்சாராயம் காய்ச்சுவதைத் தடுக்க, மாவட்ட காவல் துறையுடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் வருவாய்த் துறையினரால் அடிக்கடி சிறப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன.

கடந்த ஆண்டில் சாராயம் காய்ச்சுவது தொடா்பாக 12,868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12,856 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 5 லட்சத்து 54 ஆயிரத்து 618 லிட்டா்கள் சாராயம் அழிக்கப்பட்டது.

நிகழாண்டு மே மாதம் 31-ஆம் தேதி வரை 4,968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,959 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 94 லிட்டா்கள் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 654 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 970 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நிதழாண்டு 74,491 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 73,680 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com