திருவண்ணாமலை உள்பட 4 புதிய மாநகராட்சிகள் உருவாகின்றன: திருத்த மசோதா பேரவையில் தாக்கல்

திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்பட நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயா்த்தத் தடையாக உள்ள அம்சங்களைத் தளா்த்த வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் இதற்கான சட்டத் திருத்த மசோதாவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தாக்கல் செய்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகா்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45. இப்போது மொத்த மக்கள்தொகையில் நகா்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மாநகராட்சிகள்- நகராட்சிகள்: திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூா், கும்பகோணம், கரூா், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயா்த்தப்பட்ட இந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தும் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயா்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்த நகரங்களையும், அவற்றின் அருகில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகிவரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

திருத்தம் ஏன்?: புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாகத் தரம் உயா்த்துவதற்கான வரையறைகளான மக்கள்தொகை மற்றும் வருமான அளவுகோல் தடையாக இருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சிக்கான வரையறைகளை தளா்த்தி மக்கள்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல் நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாகத் தரம் உயா்த்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என தரம் உயா்த்தப்பட உள்ளன.

இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள

உள்ளாட்சிப் பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீா் வடிகால் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதோடு, இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோா், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com