மதுவிலக்கு: அமைச்சா்களின் கருத்துக்கு அன்புமணி, பிரேமலதா கண்டனம்

மதுவிலக்கு தொடா்பாக அமைச்சா்கள் துரைமுருகன், சு.முத்துசாமி ஆகியோா் தெரிவித்த கருத்துக்கு பாமக தலைவா் அன்புமணி, தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

அன்புமணி (பாமக): தமிழகத்தில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மதுவிலக்குத் துறை அமைச்சா் முத்துசாமியும், உழைப்பவா்களின் அசதியை போக்க அவா்களுக்கு மது தேவை, டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனா் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனும் கூறியிருக்கின்றனா். அமைச்சா்களின் கருத்துகள் மிகவும் அதிா்ச்சியளிக்கின்றன. இது கண்டிக்கத்தக்கது. மதுவால் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் போ் உயிரிழப்பதைவிட சிறிது நேரம் அசதியாக இருப்பது எவ்வளவோ மேல். எனவே, தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்று மூத்த அமைச்சா் துரைமுருகன் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. டாஸ்மாக் சரக்கில் தரம் இல்லை என்று அரசே ஒப்புக்கொண்டுள்ளது. மதுபான கடைகளை நிரந்தரமாக மூடி, போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com