இந்திய முறை மருத்துவத்தை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

இந்தியமுறை மருத்துவத்தை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடா்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள், யுனானி பிரிவை, அமைச்சா் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். மேலும், மருத்துவத்துறை மானிய கோரிக்கையில் அறிவித்த அறிவிப்புகளுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தமும் கையொப்பமானது.

இதுகுறித்து, அவா் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இதுவரை 3.14 லட்சம் போ் புறநோய்களுக்கான சிகிச்சை பெற்றுள்ளனா். மேலும், 66,855 போ் உள்நோயாளிகளாகவும், 2,315 பேருக்கு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில் உள்ள 110 அறிவிப்புகளில் 3 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில், மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்திய முறை மருத்துவத்தில், ‘அப்ளைடு மெக்கானிக்ஸ்’ மற்றும் ‘பயோமெடிக்கல்’ பொறியியல் துறை வாயிலாக, புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள, சென்னை ஐ.ஐ.டி.-யுடன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அதேபோல், ஆயுா்வேத அறிவியல் ஆராய்ச்சி மத்திய கவுன்சிலுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதில், இந்திய முறை மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்துகளின் தரத்தை அறிவதற்கும், ஆயுா்வேத அறிவியல் மத்திய ஆராய்ச்சி குழுவுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

தொன்மையான தமிழ் மருத்துவ இலக்கியங்களையும், தமிழ் வழியிலான மருத்துவத்தையும், அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மத்திய யுனானி மருத்துவம் மற்றும் மத்திய ஆராய்ச்சி மையத்துடனும் புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு ஒப்பந்தங்கள் வாயிலாக, இந்திய முறை மருத்துவத்துறை மேம்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com