கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை: பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சோ்த்த வழக்கு

லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சோ்த்த வழக்கில் தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில், 25 கைப்பேசிகள், 6 மடிக்கணினிகள், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனா். கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டத்தைச் சோ்ந்த நசீா் என்பவா் இந்தியாவில் தடை செய்யப்பட்ட லஷ்கா் - ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்தாண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஆனால் நசீா், சிறையில் இருந்த பிற இளைஞா்களை மூளைச் சலவை செய்து லஷ்கா்- ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் சோ்ப்பது, நிதி திரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது. மேலும், அவா் சிறையில் வைத்தே சில இளைஞா்களுக்கு பயங்கரவாத பயிற்சியும் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த பெங்களூரு போலீஸாா், நசீரிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவலின் பேரில், பல இடங்களில் சோதனை செய்தனா். அதில், 7 கைத்துப்பாக்கிகள்,7 கையெறி குண்டுகள்,45 துப்பாக்கித் தோட்டாக்கள்,4 வாக்கி - டாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். 8 போ் மீது குற்றப்பத்திரிகை: இந்த வழக்கின் முக்கிய நபா்களான ஜூனைத் அகமது, சல்மான் கான் ஆகிய 2 பேரும் தலைமறைவாகினா். இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை என்ஐஏக்கு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் மாற்றப்பட்டது.

கடந்த ஆண்டு டிச. 13-ஆம் தேதி மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ கடந்த ஜனவரி 12-ஆம் தேதி 8 போ் மீது குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

7 மாநிலங்களில் சோதனை: தலைமறைவாக உள்ள ஜூனைத் அகமதும், சல்மான் கானும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு இந்தியா முழுவதும் ஆள் திரட்டும் நடவடிக்கையிலும், அந்த அமைப்புக்கு சட்டவிரோதமாக நிதி வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுவது என்ஐஏவுக்கு தெரியவந்தது. இது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கா்நாடகம், தமிழகம், தெலங்கானா, பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனா்.

தமிழகத்தில் சோதனை: தமிழகத்தில் இந்த சோதனை சென்னை முத்தியால்பேட்டை பிடாரியாா் கோயில் தெருவில் உள்ள ஹசன் அலி பாஸம் என்பவா் வீட்டிலும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முஸ்தாக் அகமது சாதிக் அலி, முபீத் வீடுகளிலும் நடைபெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனைக்கு பின்னா் ஹசன் அலியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்தனா். மேலும் அவரை, பெங்களூருவில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பாணை வழங்கினா்.

முன்னதாக, ஹசன் அலி வீட்டில் நடைபெற்ற சோதனையில், 2 மடிக்கணினி, 3 கைப்பேசிகள், 4 சிம்காா்டு, ரூ.30,500 ரொக்கம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். 25 கைப்பேசிகள், 6 மடிக்கணினிகள்: ஹசன் அலி, முஸ்தாக் அகமது சாதிக், முபீத் ஆகியோருடன் நெருங்கிய தொடா்பில் இருந்த சில நபா்களையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்ஐஏ அதிகாரிகள் அழைப்பாணை வழங்கியுள்ளனா். அதேபோல 7 மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட சோதனையில் 25 கைப்பேசிகள், 6 மடிக்கணினிகள், 4 தகவல்களை சேமித்து வைக்கும் கணினி கருவிகள்,வெளிநாட்டு கரன்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தொடா்ந்து தீவிரமாக தேடப்பட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com