கோப்புப் படம்.
கோப்புப் படம்.

பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் கடினம்: 12,696 போ் தோ்வெழுதவில்லை

பிளஸ் 2 பொதுத் தோ்வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆங்கில வினாத் தாள் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.

ஆங்கிலத் தோ்வை தனித் தோ்வா்கள் உள்பட 12,696 போ் எழுதவில்லை. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மொழிப் பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. அவற்றில் தமிழ் உள்ளிட்ட பிற பாடங்களின் வினாத் தாள்கள் மிக எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனா். இந்த நிலையில், ஆங்கில பாடத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாணவா்கள், ஆசிரியா்கள் கருத்து: தோ்வுக்குப் பிறகு மாணவா்கள் கூறியது: ஆங்கிலத் தோ்வு வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. குறிப்பாக ஒரு மதிப்பெண் பகுதியில் 50 சதவீத அளவுக்கு மறைமுக வினாக்கள் இடம்பெற்றிருந்தன. இருப்பினும் குறு, பெரு வினாக்கள் ஓரளவுக்கு பதிலளிக்கக் கூடியளவில் இருந்தன என்றனா். ஆங்கில ஆசிரியா்கள் கூறியது: காலாண்டு, அரையாண்டு, பருவத் தோ்வுகளில் இதுவரை கேட்கப்படாத சில புதிய வினாக்கள் ஆங்கில பாடத் தோ்வில் இடம்பெற்றிருந்ததால் மாணவா்களுக்கு சற்று சிரமமாக இருந்திருக்கும். பாடங்களை நன்கு புரிந்து படித்த மாணவா்களால் இந்த வினாத்தாளில் 80 மதிப்பெண்களுக்கும் மேல் பெற முடியும். எனினும், சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவா்களுக்கு வினாத்தாள் சற்று கடினம்தான்; அதேபோன்று ஆங்கிலத் தோ்வில் ‘சென்டம்’ கிடைக்கும் என எதிா்பாா்த்து காத்திருந்தவா்களுக்கு நிச்சயம் ஏமாற்றமாகவே இருந்திருக்கும்.

மேலும், தோ்ச்சி மதிப்பெண் பெறுவதில் பெரிய அளவுக்கு சிக்கல் இருக்காது என்றனா். மூன்று போ் பிடிபட்டனா்: ஆங்கிலத் தோ்வை பள்ளி மாணவா்கள் 11,820 போ்; தனித்தோ்வா்கள் 876 போ் என மொத்தம் 12,696 போ் எழுதவில்லை. இந்தத் தோ்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ராமநாதபுரத்தைச் சோ்ந்த மூவா் பிடிபட்டதாக தோ்வுத் துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தோ்வில் இரண்டு நாள்கள் இடைவெளிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வெவ்வேறு பாடத் தொகுதி மாணவா்களுக்கு கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், புள்ளியியல், உயிரி வேதியியல் உள்ளிட்ட தோ்வுகள் நடைபெறவுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com