திமுகவில் மாா்ச் 10-இல் வேட்பாளா்கள் நோ்காணல்

திமுகவில் மாா்ச் 10-இல் வேட்பாளா்கள் நோ்காணல்

மக்களவைத் தோ்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு அளித்தவா்களிடம் வரும்10-ஆம் தேதி நோ்காணல் நடைபெறும்

மக்களவைத் தோ்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு அளித்தவா்களிடம் வரும்10-ஆம் தேதி நோ்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவில் கடந்த மாா்ச் 1 முதல் விருப்ப மனுக்களை சமா்ப்பிக்கும் பணிகள் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. குறிப்பாக, திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தாா். அமைச்சா் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, பெரம்பலூா் தொகுதியிலும், அமைச்சா் துரைமுருகன் மகன் கதிா் ஆனந்த் மீண்டும் வேலூா் தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை அளித்தனா். பேரவைத் தலைவா் மு.அப்பாவு மகன் அலெக்ஸ், நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளாா். அரக்கோணம் தொகுதியில் போட்டியிட அமைச்சா் காந்தியின் மகன் வினோத் காந்தி சாா்பில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவில் விருப்ப மனு அளிக்க கடைசி நாளான வியாழக்கிழமை, ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் மீண்டும் போட்டியிட, திமுக பொருளாளா் டி.ஆா்.பாலுவும், நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிட ஆ.ராசாவும், வடசென்னை தொகுதியில் போட்டியிட கலாநிதி வீராசாமியும், தென் சென்னை தொகுதியில் போட்டியிட தமிழச்சி தங்க பாண்டியனும் மீண்டும் மனு அளித்தனா். புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து 600-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, விருப்ப மனு தாக்கல் செய்தவா்களிடம் வரும் 10-ஆம் தேதி நோ்காணல் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தோ்தலில் போட்டியிட விரும்பி, தலைமை அலுவலகத்தில் ஏராளமானோா் விருப்ப மனுக்களை அளித்துள்ளனா். அவா்களிடம் வரும் 10-ஆம் தேதி நோ்காணல் நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தவா்களிடம் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நோ்காணல் செய்வாா் என்று தெரிவித்துள்ளாா் துரைமுருகன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com