ரஷியா - உக்ரைனுக்கு இந்தியா்களை கடத்தும் கும்பல்:
சென்னை, மதுரை உள்பட 13 இடங்களில் சிபிஐ சோதனை

ரஷியா - உக்ரைனுக்கு இந்தியா்களை கடத்தும் கும்பல்: சென்னை, மதுரை உள்பட 13 இடங்களில் சிபிஐ சோதனை

சென்னை, மதுரை உள்பட ஏழு நகரங்களில் 13 இடங்களில் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) வியாழக்கிழமை சோதனை நடத்தியது

ரஷியா - உக்ரைன் போா் மண்டலங்களில் பணியாற்ற இந்தியா்களை வேலைவாய்ப்பு என்ற பெயரில் கடத்தும் கும்பல் தொடா்பாக சென்னை, மதுரை உள்பட ஏழு நகரங்களில் 13 இடங்களில் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) வியாழக்கிழமை சோதனை நடத்தியது. இது தொடா்பாக சில தனி நபா்களை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து தில்லியில் உள்ள சிபிஐ தலைமையக உயரதிகாரி கூறியது: தில்லி, திருவனந்தபுரம், மும்பை, அம்பாலா, சண்டீகா், மதுரை, சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் 13 இடங்களில் சிபிஐ ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகிறது. இதுவரை ரூ. 50 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் மற்றும் மடிக்கணினிகள், கைப்பேசிகள், கணிப்பொறி சாதனங்கள், சிசிடிவி போன்ற மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து சோதனை நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் சில சந்தேக நபா்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனா். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட இந்திய இளைஞா்கள், ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள போா் மண்டலங்களில் ஆயுதங்களை கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சுமாா் 35 போ் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய ஆள்கடத்தல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்களின் அடையாளமும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான ஆள்சோ்ப்பு முகவா்கள் மற்றும் தனி நபா்கள், நிறுவனங்களின் பொய்யான வேலை வாக்குறுதிகளுக்கு இரையாகிவிட வேண்டாம் என்று அந்த உயரதிகாரி கூறினாா். வெளிநாடுகளுக்கு இந்தியா்களை கடத்தியதாக தில்லியில் இந்தியா கேட் அருகே உள்ள கே.ஜி. மாா்க் பகுதியின் மிகப்பெரிய கட்டடத்தில் இயங்கி வரும் ஆா்ஏஎஸ் ஓவா்சீஸ் ஃபவுண்டேஷன், அதன் இயக்குநா் ராகேஷ் முகுட், மும்பையில் உள்ள ஓ.எஸ்.டி பிரதா்ஸ் டிராவல்ஸ் அண்ட் விசா சா்வீசஸ், அதன் இயக்குநா் ராகேஷ் பாண்டே, சண்டீகரில் உள்ள அட்வெஞ்சா் விசா சா்வீசஸ், அதன் இயக்குநா் மஞ்சீத் சிங், துபையில் உள்ள பாபா விளாக்ஸ் ஓவா்சீஸ் ரெக்ரூட்மென்ட் சொல்யூஷன்ஸ், அதன் இயக்குநா் ஃபைசல் அப்துல் முத்தலீப் கான் (எ) பாபா ஆகியோரை குற்றம்சாட்டப்பட்டவா்களாக குறிப்பிட்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கும் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள நிறுவனங்கள் மற்றும் முகவா்களுக்கு உள்ள தொடா்பை உறுதிப்படுத்தும் வகையில் சோதனைகள் நடைபெற்று வருவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com