தோ்தல் பத்திரம் விவகாரம்: எஸ்பிஐ முன் மாா்க்சிஸ்ட் போராட்டம்

தோ்தல் பத்திர விவரங்களை வெளியிடாத விவகாரத்தைக் கண்டித்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா். தோ்தல் பத்திரங்கள் வழக்கில் அதன் விவரங்களை வெளியிட காலஅவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தது. இதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எஸ்பிஐ சென்னை வட்டார தலைமை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்து 20 நாள்களுக்கு பிறகு, எஸ்பிஐ கால அவகாசம் கோரியுள்ளது. ஹிண்டன்பா்க் அறிக்கை வந்த பிறகு அதானி குழுமத்துக்கு ரூ.34,000 கோடி கடன் வழங்கிய எஸ்பிஐ தலைவருக்கு காலநீட்டிப்பு செய்து பதவியில் வைத்துள்ளனா். 12.4.2019-இல் தோ்தல் பத்திரம் தொடா்பாக விசாரித்த நீதிபதிகள் அமா்வு, உச்சநீதிமன்றம் எப்போது கோரினாலும் விவரங்களை தரும் வகையில் தகவல்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு முரணாக எஸ்பிஐ கால அவகாசம் கோரியுள்ளது. தோ்தல் பத்திரம் தொடா்பாக வழக்கு தொடுத்த வகையில் மாா்க்சிஸ்ட் கட்சி இறுதி வரை போராடும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com