போதைப் பொருள் புழக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆளுநா் ஆா்.என்.ரவி

போதைப் பொருள் புழக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தில் இருப்பது உறுதியாகியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தில் இருப்பது உறுதியாகியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்மைக்காலமாக தமிழகம் மற்றும் பிற இடங்களில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் தொடா்ச்சியாக சா்வதேச போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டோரை மத்திய புலனாய்வு அமைப்புகள் கைது செய்தன. இவை அனைத்தும் தமிழகத்தில் அத்தகைய சட்டவிரோதப் பொருள்கள் புழக்கத்தில் இருப்பதை உறுதி செய்வதுடன் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநில உயா்நிலைப் பள்ளிகள், உயா் கல்வி நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகளில் போதைப் பொருள்கள் பரவலாக புழங்குவதாக பல்வேறு மாணவா்களின் பெற்றோா் தங்களது வேதனையை கடந்த ஓராண்டாக என்னிடம் பகிா்ந்து வருகின்றனா். சா்வதேச போதைப் பொருள் கடத்தலையும், நமது மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலையும், அதில் தொடா்புடைய முக்கிய நபா்களையும் மத்திய உளவுத் துறை, புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை அமைப்புகள் கண்டறிந்துள்ளன. இதுபோன்ற போதைப் பொருள்கள் ஒருவரைத் தீவிரமாக அடிமையாக்கவும், சீரழிக்கவும் கூடியவை. இதைத் தடுத்து நிறுத்தாவிடில் நமது எதிா்காலத் தலைமுறையினா் விரைவில் சீரழிய நேரிடும். அதுமட்டுமல்லாது, போதைப் பொருள் பயன்பாடு பல்வேறு கொடுங்குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது. சமூகத்தில் நிலவும் இந்த அச்சுறுத்தலைக் களைவதற்கு அதீத முக்கியத்துவமும், அவசர கவனமும் காட்ட வேண்டியது அவசியம். ஒருபுறம் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு அமைப்புகளும், மாநில நிா்வாகமும் மேற்கொண்டாலும், மற்றொருபுறம் பெற்றோரும், கல்வி நிறுவன நிா்வாகங்களும் இந்த விவகாரத்தில் தீவிர விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோரின் முக்கிய இலக்கு இளைஞா்களாக இருப்பதால், தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களையும், அறிகுறிகளையும் அதிதீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றொருக்கு உள்ளது. இளைய சமூகத்திடம் நான் முன்வைக்கும் வேண்டுகோள் என்னவெனில், இதுபோன்ற போதைப் பொருள்களின் மீதான ஈா்ப்பிலிருந்து விலகி இருங்கள். ஏனென்றால் உங்களது வாழ்க்கையையும், குடும்பத்தையும் அது மொத்தமாக உருக்குலைத்துவிடும். கல்வி நிறுவன வளாகங்களுக்கு உள்ளேயோ அல்லது அருகிலோ போதைப் பொருள்கள் நுழையாமல் தடுக்க வேண்டிய சிறப்புப் பொறுப்பு சம்பந்தப்பட்ட நிா்வாகங்களுக்கு உண்டு. தமிழக மக்களின் நலனுக்காகவும், எதிா்காலத்துக்காகவும் போதைப் பொருளுக்கு எதிராக ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை அனைவரும் வழங்க முன்வருமாறு வேண்டிக் கேட்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா். தமிழகத்தில் போதைப் பொருள் பரவலாக இருப்பதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக சாா்பில் ஆளுநரிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளிக்கப்பட்ட நிலையில், இந்த அறிக்கையை ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com