கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவு!

அடித்தட்டு மக்களின் ஆன்மிக உணர்வைத் தட்டி எழுப்பி லட்சக்கணக்கான மக்களுக்கு ஆன்மிக அறிவைப் புகுத்தி வந்தவர்.
காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்
காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்

கோவை காமாட்சிபுரி ஆதினம் ஞானகுரு சாக்த ஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல்நலக் குறைவால் இன்று (மார்ச் 12) செவ்வாய்க்கிழமை காலமானார்.

ராமநாதபுரம் மாவட்டம் புளியங்குண்டு பட்டி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இவரது முன்னோர்கள் வர்த்தக ரீதியாக இலங்கை சென்று மீண்டும் தாயகம் திரும்பி வந்துள்ளனர். இவர் கோவை அருகே உள்ள காமாட்சிபுரத்தில் பிறந்து வளர்ந்துள்ளார். கதிர் மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்து ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். பள்ளிப் பருவத்தில் படிக்கும்பொழுது ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் பக்தி பாடல்களைத் தொடர்ந்து பாடுபவராகவும் இருந்து வந்துள்ளார்.

அதிக ஆன்மிக ஈடுபாட்டால் காமாட்சி புரத்திற்கு அருகே உள்ள நொய்யல் ஆற்றில் கண்டறிந்த அம்மன் சிலையை எடுத்து வந்து ஆற்றங்கரை ஓரத்திலே நிறுவி அதற்கு தினமும் பூஜைகள் செய்து வந்தார். பின்னாளில் அது அங்காள பரமேஸ்வரி கோயிலாக மாறியது. இவரது அருமையான ஆன்மிக ஈடுபட்டால் காமாட்சிபுரி ஆதீனம் என தமிழகத்தில் உள்ள 50 ஆதீனங்களில் ஒரு ஆதீனமாக நிறுவி அதன் தலைவராகவும் இருந்து வந்தார். இவர் குறிப்பாக அடித்தட்டு மக்களின் ஆன்மிக உணர்வைத் தட்டி எழுப்பி லட்சக்கணக்கான மக்களுக்கு ஆன்மிக அறிவைப் புகுத்தி வந்தார்.

56 வயதான சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் தொற்று பாதிப்புடன் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலைகள் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உயிரிழந்தார்.

சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆதீனத்தில் கரோனா தேவிக்கு சிலை அமைத்து நோய்த் தொற்று நீங்கிட வழிபாடு மேற்கொண்டது பேசுபொருளானது. தமிழ்நாட்டின் மூத்த ஆதீனங்களில் ஒருவரான இவர் பட்டியல் சமூக மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சொந்த செலவில் புனரமைத்து குடமுழுக்கு செய்துள்ளார். அண்மையில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கும் நிகழ்வில் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் பூத உடல் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து இருகூரில் உள்ள ஆதீனத்திற்கு எடுத்துவரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஆதீன வளாகத்தில் உள்ள பிரதான மண்டபத்தில் சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் பூத உடல் வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இருந்து மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது மக்களின் அஞ்சலிக்கு பிறகு நாளை பூத உடல் நல்லடக்கம் ஆதீன வளாகத்திலேயே செய்யப்பட உள்ளது. உள்ளூர் பொதுமக்கள் தற்போது சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com