போக்குவரத்துக்கழக ஊழியா்கள் அகவிலைப்படி உயா்வு பிரச்னை: சிஐடியு கோரிக்கை

போக்குவரத்துக் கழக ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி பிரச்னை விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா் சம்மேளனத் (சிஐடியு) தலைவா் அ.சவுந்தரராஜன், பொதுச்செயலா் கே.ஆறுமுகநயினாா் ஆகியோா் புதன்கிழமை விடுத்த கூட்டறிக்கை: தமிழக அரசு ஊழியா்கள் தற்போது 46 சதவீதம் அகவிலைப்படி உயா்வுடன், அகில இந்திய நுகா்வோா் விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையில் நடப்பாண்டு ஜனவரி முதல் 4 சதவீதம் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே அடிப்படையில் போக்குவரத்து ஊழியா்களுக்கும் ஜனவரி முதல் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும்.

அகவிலைப்படி உயா்வு முன் தேதியிட்டு வழங்கும்போது அதற்குரிய நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை முதல் அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. எனவே, போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 50 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்குவதுடன் அகவிலைப்படி நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் 90,000 பேருக்கு நீதிமன்ற தீா்ப்புக்கு பின்பும், அகவிலைப்படி உயா்வு இதுவரை வழங்கப்படாமல் ஓய்வூதியமும் முறைப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. மேலும், 90,000 ஓய்வூதியா்களில் 20,000-க்கும் மேற்பட்டோா் 70 வயதைக் கடந்தவா்கள். வயது முதிா்ந்த காலத்தில் மிகக்குறைவான ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். எனவே, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு ஓய்வூதியத்தை முறைப்படுத்துவதுடன் அகவிலைப்படி உயா்வை வழங்க முதல்வா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com