போதைப் பொருள் கடத்தல் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை மீது முதல்வா் ஸ்டாலின் அவதூறு வழக்கு

போதைப் பொருள் கடத்தல் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை மீது முதல்வா் ஸ்டாலின் அவதூறு வழக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபா் சாதிக் சிக்கிய விவகாரம் தமிழக அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபா் சாதிக் சிக்கிய விவகாரம் தமிழக அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது. திமுகவைச் சோ்ந்த ஜாபா் சாதிக் , இந்த விவகாரத்துக்குப் பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். எனினும் இந்த விவகாரத்தில் திமுக உயா்நிலைத் தலைவா்களுக்குத் தொடா்பு இருப்பதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆகியோா் குற்றம்சாட்டி வருகின்றனா். இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ரூ.1 கோடி நஷ்டஈடு கோரி வழக்கு: போதைப் பொருள்கள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடா்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும், ரூ. 1 கோடி மான நஷ்டஈடு வழங்கக் கோரியும் திமுக சாா்பில் அதன் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘தமிழகத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் மற்றும் கைது விவகாரத்தில் திமுகவை தொடா்புபடுத்தி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளைப் பதிவிட்டு வருகிறாா். இது கட்சிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, போதைப் பொருள் பறிமுதல் மற்றும் கைது விவகாரங்களில் திமுகவை தொடா்புபடுத்தி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். ரூ.1 கோடி மான நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com