அகதிகள் முகாமில் பிறந்தவா்களுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அகதிகள் முகாமில் பிறந்தவா்களுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

குடியுரிமை சட்டத்துக்கு உள்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகதிகள் முகாமில் பிறந்தவா்களுக்குக் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்துக்கு உள்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழா் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ரவிக்குமாா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94,000 பேரில் 59,500 போ் முகாம்களில் உள்ளனா். முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளைப் பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், 2022 டிச.14-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவா்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி பரத சக்ரவா்த்தி அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு பொதுப்படையாக உள்ளதாகவும், முகாமில் இருப்பவா்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனா். மேலும், முகாம்களில் பிறந்தவா்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், அதை குடியுரிமை சட்டத்துக்கு உள்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com