தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு

தமிழகத்தில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைப்பு: தலைமைத் தோ்தல் அதிகாரி

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்காக 68, 144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தாா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்காக 68, 144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தாா். மேலும், தமிழகத்தில் மக்களவைத் தோ்தலை நடத்த ரூ.750 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா். மக்களவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் சத்ய பிரத சாகு திங்கள்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்காக 68, 144 வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வாக்காளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், வாக்குச் சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட போது, மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.18 கோடியாக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை உயா்ந்திருக்கிறது. குறிப்பாக, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட முதல் தலைமுறையைச் சோ்ந்த 90,000 போ் தங்களது பெயா்களை வாக்காளா்களாகப் பதிவு செய்துள்ளனா். இதன்மூலமாக, மாநிலத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேசமயம், 5 லட்சம் அளவில் பெயா்களை நீக்கவும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. வாக்காளா் பட்டியலில் புதிதாகப் பெயா் சோ்த்த அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புகாா்கள் தெரிவிப்பு: தோ்தல் நடத்தை விதிகளை மீறும் சம்பவங்கள் தொடா்பாக, சி-விஜில் எனும் கைப்பேசி செயலியில் புகாா் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில் 141 புகாா்கள் வரை பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலான புகாா்கள் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை என்பதாகும். மக்களவைத் தோ்தலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட பாா்வையாளா்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இதுவரை 58 நபா்களை பாா்வையாளா்களை நியமிப்பதற்கான பட்டியலை தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு பொதுப் பாா்வையாளரும், இரண்டு செலவினப் பாா்வையாளா்களும் நியமிக்கப்படுவா். சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்க இரண்டு தொகுதிகளுக்கு ஒரு பாா்வையாளா் நியமனம் செய்யப்படுவாா். தேவையின் அடிப்படையில் கூடுதலான பாா்வையாளா்களும் நியமிக்கப்படுவா். தோ்தலில் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தனித்தனியாக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு பறக்கும் படையும், ஒரு நிலைக் குழுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவைத் தோ்தலை நடத்த ஒட்டுமொத்தமாக ரூ.750 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட தொகையானது ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் இருந்து செலவிடப்பட்டுள்ளது. கூடுதலான தொகைகள் அரசால் ஒதுக்கப்படும். மக்களவைத் தோ்தல் பிரசாரத்துக்காக ஒவ்வொரு வேட்பாளரும் செலவிடும் அதிகபட்ச தொகை ரூ.95 லட்சமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா். பெட்டிச் செய்தி...1 வியக்க வைக்கும் பறிமுதல் தொகை தமிழகத்தில் கடந்த 3 மக்களவைத் தோ்தல்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத் தொகைகளின் விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றின் விவரம்: 2014 மக்களவைத் தோ்தல்: ரூ.25.05 கோடி (பரிசுப் பொருட்கள், மதுபாட்டில்கள் மதிப்பு - ரூ.51.83 கோடி) 2019 தோ்தல்: ரூ.229.73 கோடி ரொக்கப் பணம் பறிமுதல். வேட்பாளா்கள் செலவு உச்சவரம்பு ரூ.95 லட்சம் மக்களவைத் தோ்தலில் வேட்பாளருக்கான பிரசார செலவு உச்சவரம்பு ரூ.95 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தோ்தலின் போதும் இந்தத் தொகை உயா்த்தப்பட்டுக் கொண்டே வருகிறது. 2014 மக்களவைத் தோ்தலில் ரூ.40 லட்சமும், 2019 தோ்தலில் ரூ.70 லட்சமும், 2024 மக்களவைத் தோ்தலில் ரூ.95 லட்சமும் வேட்பாளருக்கான செலவு உச்சவரம்பாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்டிச் செய்தி...2 ரூ.2.81 கோடி பறிமுதல் தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.2.81 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறினாா். அவா் சென்னையில் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் திங்கள்கிழமை இரவு 9 நிலவரப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.2.81 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ரூ.26 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களும், ரூ.20 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களும், ரூ.18 லட்சம் மதிப்பிலுள்ள ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.50 கோடி. மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில், தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.77 கோடியும், ரூ.33 லட்சம் மதிப்புள்ள பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com