சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், மேடையில் இருந்தபடி தொண்டர்களைப் பார்த்து கையசைக்கும் பிரதமர் மோடி. உடன், (இடமிருந்து) டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், மருத்துவர் ராமதாஸ், கே.அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், சரத்குமார், கே.பி.ராமலிங்கம்.
சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், மேடையில் இருந்தபடி தொண்டர்களைப் பார்த்து கையசைக்கும் பிரதமர் மோடி. உடன், (இடமிருந்து) டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், மருத்துவர் ராமதாஸ், கே.அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், சரத்குமார், கே.பி.ராமலிங்கம்.

திமுக-காங்கிரஸ் சுயரூபம் அம்பலம்: பிரதமர் மோடி

சேலம்: மும்பையில் நடைபெற்ற "இந்தியா' கூட்டணியின் முதல் கூட்டத்திலேயே திமுக- காங்கிரஸ் கூட்டணியின் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சேலம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள நமக்கு சக்தியின் அருமை தெரியும். ஆனால், சக்தியின் மகத்துவத்தை உணராமல், அதை ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்டு அவர்கள் செயல்படுகின்றனர்.

சக்தியின் வடிவமாக...: கோட்டை மாரியம்மன், காஞ்சி காமாட்சியம்மன், மதுரை மீனாட்சி, கன்னியாகுமரி பகவதி அம்மன், சமயபுரம் மாரியம்மன் என சக்தியின் வடிவமாக தமிழக மக்கள் ஹிந்து தெய்வங்களை வழிபடுகின்றனர். ஹிந்து மதத்தில் சக்தி என்பதற்கு மிகப்பெரிய வடிவம் உள்ளது. ஆனால், சநாதனத்தை ஒழித்துவிடுவோம் என திமுகவும் காங்கிரஸýம் சொல்கின்றன.

ஹிந்து மதத்துக்கு எதிராக மட்டும்...: "இந்தியா' கூட்டணியினர் வேண்டுமென்றே ஹிந்து தர்மத்தைத் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். ஹிந்து மதத்துக்கு எதிராகத் திட்டமிட்டு ஒரு கருத்தியலை உருவாக்கி வருகின்றனர். இவர்கள் வேறெந்த மதத்துக்கு எதிராகவும் ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை.

ஏப்.19 முதல்...: தமிழகத்தின் பெருமையான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியதை "இந்தியா' கூட்டணி எதிர்த்தது. மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த மண்ணில், ஹிந்து தர்மத்தில் சக்தியின் வழிபாட்டை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். வரும் ஏப். 19-ஆம் தேதியன்று (மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தினம்) அவர்களின் அழிவு தமிழகத்தில் இருந்து தொடங்கப் போகிறது. மகாகவி சுப்பிரமணிய பாரதி சக்தியை வழிபட்டார். அவரின் வழியில் வந்த நானும் சக்தியை வழிபடுகிறேன். சக்தி வழிபாட்டை அழிக்க நினைப்பவர்கள் அழிக்கப்பட வேண்டும்.

பாமக இணைந்ததன்மூலம்...: வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணி உறுதிபூண்டுள்ளது. அதற்கேற்ப எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. பாமக இணைந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வலுவடைந்துள்ளது. பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸின் அனுபவமும், அன்புமணி ராமதாஸின் திறமையும் வளர்ச்சி அடைந்த தமிழகத்தைக் கட்டமைக்க உறுதுணையாக இருக்கும்.

திமுக கூட்டணியின் தூக்கம்...: கோவையில் திங்கள்கிழமை கடல்போல மக்கள் திரண்டு, எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜகவுக்கும் எனக்கும் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து திமுக கூட்டணியின் தூக்கம் தொலைந்துவிட்டது.

தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்: பாஜகவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் வாக்களிக்க வேண்டும் என தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள். வளர்ச்சியடைந்த தமிழகம், வலிமையான பாரதம் உருவாக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேறவும், விவசாயிகள், மீனவர்கள் நலன் காக்கப்படவும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற வேண்டும். இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம்.

குடும்ப ஆட்சி: திமுகவும் காங்கிரஸýம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன. ஊழல், குடும்ப ஆட்சி இரண்டும் அவர்களின் இரு கண்களாக உள்ளன. அவர்களின் ஊழலைச் சொல்ல ஒருநாள் போதாது. தமிழகத்துக்கு பல லட்சம் கோடி ரூபாய் நிதியளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், இங்குள்ள அரசு அதில் எப்படி கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் போடுகிறது.

தமிழகத்தின் பெரும் தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மூப்பனாரை பிரதமராக விடாமல் காங்கிரஸ் தடுத்தது. காங்கிரஸின் குடும்ப ஆட்சி, தமிழரான அவரை பிரதமராக விடாமல் தடுத்துவிட்டது.

நேர்மைக்கு இலக்கணமான பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அரசியலில் தூய்மை இருந்தது. அவர் உருவாக்கிய மதிய உணவுத் திட்டம் மூலம் எண்ணற்ற மாணவர்கள் கல்வி அறிவு பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைந்தனர். இந்தத் திட்டம் எனக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருந்தது.

பெண்களின் நலனுக்காக...: உஜ்வலா திட்டத்தில் இலவச எரிவாயு இணைப்பு, ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என பெண்களின் நலனுக்காக பல திட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

தமிழகத்தில் 3.5 கோடி பேருக்கு ரேஷன் பொருள்கள் கிடைப்பதால் பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. சிறுதொழில் முனைவோருக்கு முத்ரா திட்டத்தில் பல லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை காணாத வளர்ச்சி: பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் மிகப் பெரும் கனவுகளை வைத்துள்ளோம். நவீன உள்கட்டமைப்பின் மூலம் மிகப் பெரிய உயரங்களை எட்டி வருகிறோம். சாலை மேம்பாடு, எய்ம்ஸ் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் என இதுவரை காணாத வளர்ச்சியை உருவாக்கி வருகிறோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரண்டு பாதுகாப்புத் தளவாட வழித்தடங்களை உருவாக்கி வருகிறது. அதில் ஒன்றை தமிழ்நாட்டில் கொண்டுவந்துள்ளோம். இதன்மூலம் சேலம் உருக்காலையைச் சார்ந்துள்ள மக்கள் பயன்பெறுவார்கள். நாடு முழுவதும் 7 இடங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படுகிறது. ரயில்வே துறையின் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இணைந்திருக்கும் தலைவர்களை வரவேற்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பாலும் வலிமையான பாரதம் உருவாகும். அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகள். அது மட்டுமல்ல, ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறோம். எனவே, தமிழக மக்கள், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்து புதிய சாதனையைத் தொடங்கிவைக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com