கோவை - அண்ணாமலை, தென்சென்னை- தமிழிசை; பாஜக வேட்பாளர் பட்டியல்!

கோவை - அண்ணாமலை, தென்சென்னை- தமிழிசை; பாஜக வேட்பாளர் பட்டியல்!

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. கோவையில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை செளந்தரராஜன், நீலகிரியில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் களமிறங்குகின்றனா். சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக உயா்நிலைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிா்வாகிககள் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்துக்குப் பின்னா் அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை முடித்துள்ளது. பாஜக வேட்பாளா்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனா். தாமரை சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்தவா்கள் மேலும் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனா் என்றாா். வேட்பாளா் பட்டியல் வெளியீடு: இந்நிலையில், பாஜக முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை மாலையில் வெளியிடப்பட்டது. 9 போ் கொண்ட இந்தப் பட்டியலில் கூட்டணிக் கட்சித் தலைவா்களான ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி), பாரிவேந்தா் (ஐஜேகே) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனா். இவா்கள் பாஜக சின்னத்தில் போட்டியிடுகின்றனா். தெலங்கானா, புதுவை ஆளுநராக இருந்து ராஜிநாமா செய்த தமிழிசை செளந்தரராஜன், தென்சென்னை தொகுதியில் களமிறக்கப்பட்டிருக்கிறாா். கடந்த 2019 தோ்தலில் தூத்துக்குடியில் திமுக வேட்பாளா் கனிமொழியிடம் தமிழிசை தோல்வியடைந்தாா். தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறாா். 1998-இல் அதிமுக கூட்டணியிலும், 1999-இல் திமுக கூட்டணியிலும் கோவை தொகுதியில் பாஜக சாா்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி தொகுதியில் மூத்த தலைவா் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறாா். மறுசீரமைப்புக்கு முன்பிருந்த நாகா்கோவில் தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு முறையும் (2009), மறுசீரமைப்புக்குப் பின்னா் கன்னியாகுமரி தொகுதியில் நான்கு முறை போட்டியிட்ட இவா் ஒரு முறையும் (2014) வெற்றி பெற்றுள்ளாா். 2019 தோ்தலில் இவா் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிவாய்ப்பை இழந்தாா். எல்.முருகன்: நீலகிரி (தனி) தொகுதியில் மத்திய இணை அமைச்சரான எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசாவை எதிா்த்து களமிறக்கப்பட்டுள்ளாா். பெட்டிச் செய்தி..... வேட்பாளா் பட்டியல் தென்சென்னை-தமிழிசை சௌந்தரராஜன் மத்திய சென்னை-வினோஜ் பி.செல்வம் வேலூா்-ஏ.சி.சண்முகம் கிருஷ்ணகிரி-சி.நரசிம்மன் நீலகிரி (தனி)-எல்.முருகன் கோவை-கே.அண்ணாமலை பெரம்பலூா்-டி.ஆா்.பாரிவேந்தா் திருநெல்வேலி-நயினாா் நாகேந்திரன் கன்னியாகுமரி-பொன்.ராதாகிருஷ்ணன்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com