குட்கா வழக்கு: விசாரணைக்கு அனுமதி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

குட்கா முறைகேடு தொடா்பான முன்னாள் அமைச்சா்கள் உள்ளிட்டோா் மீதான விசாரணைக்கு ஒப்புதல்

குட்கா முறைகேடு தொடா்பான முன்னாள் அமைச்சா்கள் உள்ளிட்டோா் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைத்துவிட்டதாகவும், அது தொடா்பான கோப்புகள் தங்களிடம் பரிசீலனையில் உள்ளதாகவும் சிபிஐ தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கா் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமாா் ஆகிய 6 போ் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்த சிபிஐ, அவா்களுக்கு எதிராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் டிஜிபி, சென்னை காவல் துறை முன்னாள் ஆணையா் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகளுக்கு எதிராக 2022 நவம்பா் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால், அதை சிபிஐயிடம் நீதிமன்றம் திரும்ப அளித்தது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக ஆளுநா் ஒப்புதல் அளித்தாா். கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, குட்கா முறைகேடு தொடா்பான வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

அனுமதி கிடைத்துள்ளது: இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலா் வாலன்டினா முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அதிகாரி நேரில் ஆஜரானாா். அப்போது நீதிபதி, விசாரணையின் தற்போதைய நிலை என்ன? விசாரணைக்கு அனுமதி கிடைக்காத இருவருக்கு எதிராக ஒப்புதல் கிடைத்துவிட்டதா? என கேள்வி எழுப்பினாா்.

அதற்கு விசாரணை அதிகாரி, ஒப்புதல் கடிதம் சிபிஐயிடம் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்தாா். பரிசீலனை முடிந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எவ்வளவு காலம் ஆகும்? என நீதிபதி கேள்வி எழுப்பினாா். விரைவாக தாக்கல் செய்வதாக விசாரணை அதிகாரி தெரிவித்தாா். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஏப்.15-ஆம் தேதிக்கு ஒத்துவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com