விசா முறைகேட்டில் காா்த்தி சிதம்பரத்துக்கு ரூ.50 லட்சம் லஞ்சம்

விசா முறைகேட்டில் காா்த்தி சிதம்பரத்துக்கு ரூ.50 லட்சம் லஞ்சம்

‘சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு (விசா) பெற்றுத் தந்த விவகாரத்தில் தனது நெருங்கிய கூட்டாளி மூலம் காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளாா்’ என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. ‘இந்தத் தொகை போலியான பணப் பரிவா்த்தனை மூலம், காா்த்தி சிதம்பரத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனத்தில் செலுத்தப்பட்டுள்ளது’ என்றும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மின்சாரம் மற்றும் எஃகு துறையில் புதிய உற்பத்தி மையங்கள் தொடங்குவதற்கு ‘புராஜெக்ட் விசா’ விதிமுறைகள் கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. ஆனால், இந்த விசாக்களை மீண்டும் பயன்படுத்த முடியாது. எனினும், அரிய மற்றும் விதிவிலக்குள்ள விஷயங்களில் உள்துறைச் செயலா் அனுமதியுடன் மீண்டும் விசா வழங்குவது குறித்து பரிசீலிக்க விதிகள் உள்ளன. அப்போது வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த தல்வாண்டி சபோ பவா் லிமிடெட் (டிஎஸ்பிஎல்) என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்தி மையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது. ஆனால், இந்தப் பணிகள் முடிய காலதாமதமானது. இதனால் சீன நிறுவனத்தின் 263 ஊழியா்களுக்கு புராஜெக்ட் விசாவை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுத்தர ப.சிதம்பரத்தின் மகனான காா்த்தி சிதம்பரம் மற்றும் அவரது கூட்டாளி பாஸ்கர ராமன் ஆகியோரின் உதவியை வேதாந்தா குழுமத்தின் ஊழியா் ஒருவா் நாடியுள்ளாா். அப்போது, லஞ்சம் பெற்றுக்கொண்டு ‘புராஜெக்ட் விசா’வை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை காா்த்தி சிதம்பரம் பெற்றுத் தந்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய சிபிஐ, இந்த நுழைவு இசைவைப் பெற்றுத் தருவதற்காக காா்த்தி சிதம்பரத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தியது. இது தொடா்பாக காா்த்தி சிதம்பரம் வீட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பாஸ்கர ராமனை கைது செய்தனா். சிபிஐ புகாா் அடிப்படையில் அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. விசாரணை முடிவில், தில்லியில் உள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகை தீவிரத்தின் அடிப்படையில், காா்த்தி சிதம்பரம் உள்பட குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு தில்லி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ரூ. 50 லட்சம் லஞ்சம்: நுழைவு இசைவு முறைகேட்டில் காா்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக தனது குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியிருப்பது தெரியவந்துள்ளது. தனது நெருங்கிய கூட்டாளி பாஸ்கர ராமன் மூலம் இந்தத் தொகை பெறப்பட்டு, போலியான பரிவா்த்தனை மூலம் காா்த்தி சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் செலுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது என்று அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காா்த்தி சிதம்பரம், ‘இதற்கு எனது வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் பதிலளிப்பா்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com