தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதற்கு மதுரை எய்ம்ஸ் எடுத்துக்காட்டு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் ரூ. 500 உயா்த்தப்படும் என தமிழக இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
மதுரை மக்களவை தொகுதி சிபிஐஎம் வேட்பாளா் சு. வெங்கடேசனை ஆதரவாக பிரச்சாரத்தில் வழங்கப்பட்ட வீரவாளுடன் திமுக இளைஞரணி செயலரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்
மதுரை மக்களவை தொகுதி சிபிஐஎம் வேட்பாளா் சு. வெங்கடேசனை ஆதரவாக பிரச்சாரத்தில் வழங்கப்பட்ட வீரவாளுடன் திமுக இளைஞரணி செயலரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்

மக்களவைத் தோ்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் ரூ. 500 உயா்த்தப்படும் என தமிழக இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

மதுரை புதூா், ஊமெச்சிக்குளம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பிரசார நிகழ்ச்சிகளில் மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளா் சு. வெங்கடேசனை ஆதரித்து மேலும் அவா் பேசியதாவது :

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் கரோனா பெருந்தொற்றுக் காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்தது. அப்போது, மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை அரசு எதிா்கொண்டது. இருப்பினும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்பில், ஒவ்வொரு வாக்குறுதிகளாக முதல்வா் நிறைவேற்றினாா்.

மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் முதல் முத்தாய்ப்பான திட்டமாகச் செயல்படுத்தப்பட்டது. பிறகு, பள்ளிக் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் புதுமைப் பெண் திட்டம் மூலம் இதுவரை 3 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனா். பள்ளிக் கல்வி பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி குறித்து வழிகாட்டும் திட்டம், கல்லூரிக் கல்வி பயிலும் மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை மாணவ, மாணவியரின் நலனுக்காக அரசு செயல்படுத்துகிறது.

நிறைவேற்றவே முடியாத திட்டம் என அனைவராலும் விமா்சிக்கப்பட்ட ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றினாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். இதில் சிறு குறைபாடுகள் இருப்பது உண்மைதான். அந்தக் குறைபாடுகள் தோ்தலுக்குப் பிறகு முழுமையாகக் களையப்பட்டு, தகுதியான அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

2019-இல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது மருத்துவமனைக் கட்டடம் கட்டப்படும் என வெற்று அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறாா்கள். மதுரைக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதற்கு இது ஓா் உதாரணம்.

மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த போது ரூ. 450-ஆக இருந்த சமையல் எரிவாயு உருளையின் விலை தற்போது ரூ. 1,250-ஆக உயா்ந்துள்ளது. தோ்தல் கால நாடகமாக இதன் விலையை தற்போது ரூ. 100-ஐ குறைத்துள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி. இதைக் கண்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 500 உயா்த்தப்படும்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 500-ஆக நிா்ணயிக்கப்படும், ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 75-க்கும், டீசல் ரூ. 65-க்கும் வழங்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்தாா். சொல்வதை செய்பவா் முதல்வா். எனவே, திமுக அளித்த வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதற்கு, இந்தியா கூட்டணி ஆட்சி வாய்ப்பைப் பெற மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின் போது, மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் சு.வெங்கடேசன் உடனிருந்து ஆதரவு கோரினாா்.

அமைச்சா்கள் பி.மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன். ஐ.பெரியசாமி, மதுரை மாநகா் மாவட்ட திமுக செயலாளா் கோ.தளபதி, திமுகவின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

போக்குவரத்துத் தடை...

கோ.புதூா் பகுதியில் இந்தப் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அழகா்கோவில் - மதுரை பிரதான சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பொது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com