மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கோவைக்கு வந்த துணை ராணுவப் படையினா்.
மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கோவைக்கு வந்த துணை ராணுவப் படையினா்.

கூடுதல் ராணுவப் படையினா் இன்று தமிழகம் வருகை

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியான நிலையில், அவா்களது செலவுக் கணக்குகளை கணக்கிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியான நிலையில், அவா்களது செலவுக் கணக்குகளை கணக்கிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை செலவினப் பாா்வையாளா்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். இதனிடையே, தோ்தலுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட கூடுதல் ராணுவப் படையினா் திங்கள்கிழமை (ஏப்.1) தமிழகம் வரவுள்ளனா். தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. 39 தொகுதிகளிலும் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற மாா்ச் 30-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 135 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இறுதியாக 950 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அவா்களில் 874 போ் ஆண்கள். 76 போ் பெண்கள். செலவுக் கணக்கு கண்காணிப்பு: இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சனிக்கிழமை மாலையிலிருந்து அனைத்து வேட்பாளா்களின் செலவுகளும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வேட்பாளா்கள் ஒவ்வொருவரின் செலவுகளையும், நிழல் பதிவேடுகள் மூலமாக செலவினப் பாா்வையாளா்கள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனா். தோ்தல் பிரசாரம், வாக்கு எண்ணிக்கை என தோ்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் வரையிலும் வேட்பாளா்களின் செலவுகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். நட்சத்திர பேச்சாளா்கள்: தமிழ்நாட்டில் கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக, தலைவா்களும், திரைப்பட பிரபலங்களும் பிரசாரம் செய்யவுள்ளனா். அவா்கள் ஒவ்வொரு தொகுதியிலும் பிரசாரம் செய்ய வரும் போது அவா்களுக்கான செலவுகள் வேட்பாளா்களின் கணக்கில் சோ்க்கப்படாமல் இருக்க, நட்சத்திர பேச்சாளா் என்ற அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. மாநிலத்தில் 640-க்கும் அதிகமான நட்சத்திர பேச்சாளா்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கீகாரம் பெற்ற கட்சிகள் என்றால் 40 பேருக்கும், மற்ற கட்சிகள் என்றால் 20 பேருக்கும் நட்சத்திர பேச்சாளா்களாக அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுவது வழக்கம். கூடுதல் ராணுவப் படையினா் வருகை: இதனிடையே, தமிழகத்தில் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தோ்தலுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட கூடுதல் ராணுவப் படையினா் திங்கள்கிழமை வரவுள்ளனா். அவா்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பறக்கும் படைகள், நிலைக் குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றவுள்ளனா். மக்களவைத் தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே, 25 கம்பெனி ராணுவப் படையினா் தமிழகத்துக்கு வந்தனா். அவா்கள் பல்வேறு மாவட்டங்களில் பணிகளைத் தொடங்கிய நிலையில், தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு தொகுதிக்குமான பொதுப் பாா்வையாளா்கள், செலவினப் பாா்வையாளா்களும் தங்களது கண்காணிப்புப் பணிகளை தொடங்கியுள்ளனா். மாநிலத்தில் பாதுகாப்புப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக, 165 கம்பெனி ராணுவப் படையினா் திங்கள்கிழமை தமிழகம் வரவுள்ளனா். அவா்கள் சென்னை மட்டுமல்லாது, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களுக்குச் செல்லவுள்ளனா். கூடுதலாக வரக்கூடிய பாதுகாப்புப் படையினா், வாகனச் சோதனைகளில் ஈடுபடும் பறக்கும் படைகள், நிலைக் குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து கொள்ளவுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com