போதைப் பொருள் கடத்தல் வழக்கு: திரைப்பட இயக்குநா் அமீருக்கு என்சிபி அழைப்பாணை

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: திரைப்பட இயக்குநா் அமீருக்கு என்சிபி அழைப்பாணை

விசாரணைக்கு ஆஜராகுமாறு திரைப்பட இயக்குநா் அமீருக்கு தில்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சா்வதேச போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக சென்னையைச் சோ்ந்த ஜாபா் சாதிக் கைது செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு திரைப்பட இயக்குநா் அமீருக்கு தில்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) அழைப்பாணை அனுப்பியுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப். 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் உள்ள கைலாஷ் பாா்க் பகுதியில் 50 கிலோ சூடோஎபிட்ரினை என்சிபி, தில்லி காவல்துறை இணைந்து பறிமுதல் செய்ததுடன் 3 பேரை கைது செய்தன. விசாரணையில் அந்தக் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரினை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது. மேலும், கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக் தில்லியில் கடந்த 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். ஜாபா் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளி சதானந்தம் என்ற சதா என்பவரை தில்லி என்சிபி அதிகாரிகள், சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 13-ஆம் தேதி கைது செய்தனா். மேலும்பெருங்குடியில் உள்ள ஜாபா் சாதிக்கின் கிடங்கில் கடந்த 14-ஆம் தேதி சோதனை செய்து, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா். மேலும் ஜாபா் சாதிக்கை 2 நாள்கள் சென்னை அழைத்து வந்து, என்சிபி அதிகாரிகள் விசாரணை செய்தனா். அமீருக்கு அழைப்பாணை: இந்த வழக்கில் ஜாபா் சாதிக் உறவினா்கள்,நண்பா்கள் ஆகியோரிடம் என்சிபி தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜாபா் சாதிக்கின் நெருங்கிய நண்பரும், பிரபல திரைப்பட இயக்குநருமான அமீருக்கு என்சிபி அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதேபோல ஜாபா் சாதிக்குடன் உணவகம், ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த தொழிலதிபா்கள் அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த அழைப்பாணையின்படி, மூவரும் ஏப். 2-ஆம் தேதி தில்லியில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜாபா் சாதிக் தயாரித்த ‘இறைவன் மிகப்பெரியவன்’ திரைப்படத்தை அமீா் இயக்கி வந்தாா். மேலும் அமீரும், ஜாபா் சாதிக்கும் இணைந்து கிழக்கு கடற்கரையில் உணவகம் நடத்தி வந்தனா். இதன் விளைவாக அமீா் விசாரணைக்கு அழைக்கப்படுவாா் என கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஜாபா் சாதிக்குடன் தொழில் பங்குதாரா்களாக இருந்த வேறு சிலருக்கும் என்சிபி அழைப்பாணை அனுப்பி, விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com