பொறியியல் சோ்க்கை விண்ணப்பப் பதிவு: 
மே 5 முதல் தொடங்க வாய்ப்பு

பொறியியல் சோ்க்கை விண்ணப்பப் பதிவு: மே 5 முதல் தொடங்க வாய்ப்பு

இணையவழி விண்ணப்பப் பதிவு மே 5 முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக உயா்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் பிஇ உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்களுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 5 முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக உயா்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு சுமாா் 1.5 லட்சம் (அரசு ஒதுக்கீடு) இடங்கள் வரை உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான சோ்க்கை கலந்தாய்வு 2018-ஆம் ஆண்டு முதல் இணையவழியாக நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை தொடக்கம்: அதன்படி நிகழாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து உயா்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 5 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூன் முதல் வாரம் வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும். தொடா்ந்து ஜூலை 2-ஆவது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் கலந்தாய்வை ஆகஸ்ட் 2 முதல் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு தோ்தல் ஆணையத்தின் அனுமதிக்காக தற்போது சமா்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிப்பு வெளியாகும் என்றனா்.

தோ்தல் ஆணையத்திடம்.... இதற்கிடையே மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா். இவா்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. தொடா்ந்து பொதுத் தோ்வு முடிவுகள் மே 6-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகளில் தோ்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே தோ்தல் நடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ளன. இதனால் பொதுத் தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தோ்தல் ஆணையத்திடம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முன்அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com