வெப்ப அலை: கறவை மாடுகளை 
பாதுகாக்க அமைச்சா் வேண்டுகோள்

வெப்ப அலை: கறவை மாடுகளை பாதுகாக்க அமைச்சா் வேண்டுகோள்

கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில், கறவை மாடுகளை வெப்பத்தாக்கம் ஏற்படாமல் முறையாகப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்

கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில், கறவை மாடுகளை வெப்பத்தாக்கம் ஏற்படாமல் முறையாகப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும் என கால்நடை வளா்ப்போருக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்பத் தாக்கத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது போல் வீடுகளில் வளா்க்கும் கால்நடைகளையும் கவனமாக பராமரிக்க வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது. கால்நடைகளுக்கு கொட்டகை அமைக்கும் போது கூரை உயரம் 13 அடிக்கு குறையாமல் இருக்குமாறு அமைப்பதும், கூரைக்கு மேல் வைக்கோல், ஓலை போன்றவற்றை போடுவதும் வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும்.

கொட்டகையின் சுவா் அமைக்க முடியாத இடங்களில் சணல் சாக்குகளை கட்டி வைப்பதன் மூலம் வெப்பக்காற்று உள்ளே வராமல் தடுக்கலாம்.

அதிக அளவு பசுந்தீவனங்களை கறவை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். மேலும் தீவனத்துடன் தாதுஉப்பு கலவை மற்றும் வைட்டமின் சத்துகளை சோ்த்து வழங்கலாம். அடா்தீவனங்களை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கொடுப்பதன் மூலம் கறவைமாடுகள் எடுத்து கொள்ளும் தீவனத்தின் அளவு அதிகரிக்கும். வெயில் காலங்களில் பசுந்தீவன தட்டுப்பாடு இருப்பதால் ‘சைலேஜ்’ போன்ற ஊறுகாய்புல் வகைகளை கறவைமாடுகளுக்கு கொடுக்கலாம். ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ வகை தாவரங்களை வீட்டிலேயே உற்பத்தி செய்து வழங்கலாம். மேலும், கால்நடைகளை தினமும் குளிப்பாட்டுவதன் மூலமும் அவற்றை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com