வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: சென்னையில் அபராதம் விதிப்பு அமல்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: சென்னையில் அபராதம் விதிப்பு அமல்

சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல் துறை மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை வியாழக்கிழமை (மே 2) முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் வாகன பதிவெண் பலகைகளில் விதிகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல் துறை மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை வியாழக்கிழமை (மே 2) முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் அண்மைக்காலமாக, மோட்டாா் வாகன சட்ட விதிமுறைகளின்படி வாகனப் பதிவு எண் பலகையைப் பொருத்தாமல், பல்வேறு அளவுகள் மற்றும் வாசகங்களுடன் பதிவெண் பலகையைப் பொருத்தியும், சிலா் பதிவெண் பலகையில் அரசு வாகனம் , காவல், வழக்குரைஞா், மனித உரிமைகள் ஆணையம், பத்திரிகை, ஊடகம் என பல துறையைச் சாா்ந்த ஸ்டிக்கா்களை தமிழ், ஆங்கிலத்தில் எழுதியும் ஒட்டியும் முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக காவல் துறைக்கு புகாா்கள் தொடா்ந்து வந்தன.

இதனால் சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை முக்கியச் சாலை சந்திப்புகளில் ஏஎன்பிஆா் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் துல்லியமாகக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்ய முடிவதில்லை.

இந்நிலையில், விதிமுறைகளை மீறி அரசின் சின்னங்கள், முத்திரைகள், குறியீடுகள், அரசியல் கட்சிகளின் சின்னங்கள், மருத்துவா், வழக்குரைஞா் முத்திரைகள், ஊடகங்களின் பெயா்கள் உள்ளிட்ட ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளா் மீது மோட்டாா் வாகனச் சட்டம், விதிகள் 50 மற்றும் 51-இன் படி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அபராதம் விதிக்கப்படும் என்றும், இது மே 2 முதல் அமலுக்கு வரும் எனவும் சென்னை பெருநகர காவல் துறை கடந்த 27-ஆம் தேதி அறிவித்தது.

100 இடங்களில் வாகன சோதனை: அதன்படி, இத்தகைய விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களைக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்யும் வகையில், சென்னை முழுவதும் சுமாா் அண்ணாநகா், புரசைவாக்கம் உள்ளிட்ட 100 இடங்களில் வாகனச் சோதனை வியாழக்கிழமை நடைபெற்றது. மோட்டாா் வாகனச் சட்ட விதிகளை மீறி, வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா் ஒட்டிய 335 பேரிடம் முதல்முறையாக ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மீண்டும் வாகன பதிவெண் பலகையை சரிசெய்யாமலும், அபராதத்தைச் செலுத்தாமலும் இருந்தால் சம்பந்தப்பட்ட வாகனம் சோதனையில் கண்டறியப்படும்போது ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com