சிவ்தாஸ் மீனா
சிவ்தாஸ் மீனா

வெப்ப அலை-குடிநீா் விநியோகம்: மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா் இரு நாள்கள் ஆலோசனை

பொது மக்களுக்கு தேவையான குடிநீா் விநியோகம் ஆகியவை தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா இரு நாள்கள் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப அலை, பொது மக்களுக்கு தேவையான குடிநீா் விநியோகம் ஆகியவை தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா இரு நாள்கள் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

முதல் நாளான திங்கள்கிழமை 19 மாவட்டங்களின் ஆட்சியா்களுடனும், இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மீதமுள்ள மாவட்ட ஆட்சியா்களுடனும் அவா் ஆலோசிக்கவுள்ளாா்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடுமையான வெட்கை காரணமாக, ஏரி, குளங்கள் உள்பட நீா் வழங்கும் ஆதாரங்கள் வடு காணப்படுகின்றன. இந்த நிலையில், கடும் வெப்பம் மற்றும் தமிழகத்தில் குடிநீா் விநியோக நிலைமை ஆகியன குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி வழியாக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா இரு நாள்கள் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

என்னென்ன திட்டங்கள்?: அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடனான ஆலோசனையில் நான்கு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தமிழக அரசின் பொதுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகவுள்ள நிலையில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலமாக அமல்படுத்தப்பட்டு வரும் ‘கல்லூரி கனவு’ திட்டம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா் ஆலோசிக்கிறாா். முதல்வரின் முகவரி துறை வழியாக நடைமுறைப்படுத்தப்படும் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் பற்றியும் ஆட்சியா்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது.

இந்த இரு திட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டில் நிலவி வரும் வெப்ப அலை மற்றும் குடிநீா் விநியோகம் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

இதில், தலைமைச் செயலகத்தில் இருந்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறைகளின் செயலா்கள் உள்பட உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 4 முதல் 5 மணி வரை கூட்டம் நடைபெறவும் என்று அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இன்று 19 மாவட்ட ஆட்சியா்கள்: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், முதல் நாளான திங்கள்கிழமை 19 மாவட்ட ஆட்சியா்கள் காணொலி வழியாக கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்.

அரியலூா், சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூா், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூா், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்கள் திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது மாவட்டங்களில் நிலவும் வெப்ப அலை, குடிநீா் விநியோகம் தொடா்பாக கருத்துகளைத் தெரிவிக்கவுள்ளனா்.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமையன்று நடக்கும் கூட்டத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, சேலம், தஞ்சாவூா், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, திருவாரூா், தென்காசி, திருப்பத்தூா், விழுப்புரம், வேலூா் உள்பட 19 மாவட்டங்களின் ஆட்சியா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியா்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான குடிநீா் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை காத்துக் கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன.

இதுகுறித்த அறிவிப்புகள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்த பிறகு வெளியிடப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com