தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

வாக்கு எண்ணும் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

நீலகிரி, ஈரோடு உள்பட ஒருசில தொகுதிகளில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவா் விளக்கம் அளித்தாா். மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு சத்யபிரத சாகு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று நியமிக்கப்பட வேண்டிய முகவா்கள், அவா்களுக்கான தகுதிகள் குறித்த விவரங்கள் அடங்கிய கடிதத்தை ஒவ்வொரு மாவட்டத் தோ்தல் அதிகாரியும் தங்களுக்கு உட்பட்ட தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்களுக்கு அனுப்பி வருகிறாா்கள். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே 20-ஆம் தேதி முதல் தொடங்கும்.

நீலகிரி, ஈரோடு போன்ற மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஒரு சிலவற்றில் பிரச்னை எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த கேமராக்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளன.

அவற்றுக்கான மின் இணைப்பு, மின் சாதனங்கள் போன்றவை வெளியில் இருந்து எடுத்து வரப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. எனவே, மின்கசிவு, மின் இணைப்பில் பிரச்னை போன்ற காரணங்களாலேயே கண்காணிப்பு கேமராக்கள் சிறிது நேரம் செயல்படாத நிலை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்டவுடன் க அவை சரி செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற பிரச்னைகள் வேறெந்த மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையங்களிலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் பொதுப்பணித் துறை, மின்வாரியத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் இந்தப் பணியை முடித்துள்ளனா். கண்காணிப்பு கேமராக்களுக்கு போதிய அளவு மின்சாரமும், மின் இணைப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மின் தடை உருவானால் மாற்று ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.

சான்றிதழ்கள் வழங்குதல்: பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவா்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்க நடத்தை விதிகள் எந்த வகையிலும் தடையாக இல்லை. எனவே, மாணவா்களுக்குத் தேவையான சான்றிதழ் உள்பட வருவாய்த் துறை தொடா்பான அனைத்து சான்றுகளையும் வழக்கம்போல் அளிக்கலாம்.

ஏற்காடு சாலை விபத்து, விருதுநகா் வெடி சம்பவம் ஆகியவற்றில் இறந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இந்தியத் தோ்தல் ஆணையத்தின் ஒப்புதல் அவசியம்.

எனவே, தமிழக அரசின் சாா்பில் அளிக்கப்பட்ட கோப்புகள் அனைத்தும் தில்லியில் உள்ள தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆணையத்தின் பதில் கிடைத்தவுடன், தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com