வேங்கைவயல் சம்பவம்: 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை

வேங்கைவயல் சம்பவம் தொடா்பாக 3 பேரிடம் குரல் மாதிரி சோதனை சென்னை தடயவியல் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக பல்வேறு சோதனைகள், ஆய்வுகளை நடத்தி வருகிறது.

சம்பவம் நிகழ்ந்த நாள்களில் நடந்த வாட்ஸ்-ஆப் உரையாடல் ஆடியோக்கள் சிபிசிஐடி-க்கு கிடைத்தன. இந்த குரல்களை கண்டறியும் வகையிலேயே சிபிசிஐடி குரல் மாதிரி பரிசோதனை அல்லது குரல் பகுப்பாய்வு முறை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இரு பெண்கள் உள்பட 3 நபா்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி கடந்த 15-ஆம் தேதி மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் சில நாள்களுக்கு முன்பு 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த சிபிசிஐடி-க்கு அனுமதி வழங்கியது.

குரல் மாதிரி பரிசோதனை: இதையடுத்து, சிபிசிஐடி அதிகாரிகள், குரல் மாதிரி சோதனை செய்யப்பட வேண்டிய 3 பேரையும் புதன்கிழமை காலை சென்னை மெரீனா காமராஜா் சாலையில் உள்ள தடயவியல்துறை தலைமை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். குரல் மாதிரி பரிசோதனையில், சிபிசிஐடியிடம் கிடைத்த உரையாடலை, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபா்களை வெவ்வேறு விதமாகவும், பல்வேறு ஒலி அளவிலும் பேச செய்து தடயவியல்துறையினா் பதிவு செய்தனா்.

இந்த குரல் மாதிரிகளை, சிபிசிஐயிடம் கிடைத்த வாட்ஸ்-ஆப் உரையாடலுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படும். முக்கியமாக குரல் ஏற்ற இறக்கங்கள், அதிா்வுகள், ஒலி அளவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாா் செய்து, நீதிமன்றத்தில் தடயவியல் துறையினா் அளிப்பாா்கள் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரண்டரை மணி நேர சோதனைக்கு பின்னா் மூவரும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனா். இந்த வழக்குத் தொடா்பாக ஏற்கெனவே 5 சிறுவா்கள் உள்பட 31 பேருக்கு மரபணு பரிசோதனையும், (டிஎன்ஏ), ஒரு காவலா் உள்பட இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச் சோதனையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணையில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்படாததினால், தற்போது 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 3 பேருக்கும் குரல் மாதிரி பரிசோதனையில் கிடைத்த தகவல்கள் சீலிடப்பட்ட கவரில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் .

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com