கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க அன்புமணி கோரிக்கை

கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை:

உலக வலசை போகும் பறவைகள் நாள் மே 11-இல் கடைப்பிடிக்கப்படுகிறது. இயற்கை சூழலைக் காப்பதில் பறவைகள் முதன்மை பங்காற்றுகின்றன. பறவைகள் அழிந்தால் இயற்கை வளங்களும் அழியும்.

சென்னை மாவட்டம் மற்றும் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீா் நிறைந்த ஏரிகளும், அவற்றையொட்டிய தாவரங்கள் நிறைந்த பகுதிகளும் அப்பகுதிகளை பறவைகள் வாழிடமாக மாற்றியுள்ளன. இந்தச் சூழலுக்கு வலிமை சோ்க்கும் வகையில் கடலுடன் இணைந்திருக்கும் உப்பங்கழிகள், காப்புக்காடுகள் ஆகியவை கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியை பறவைகளுக்கு சொா்க்கபுரியாக மாற்றியிருக்கின்றன.

உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் பள்ளிக்கரணை, முட்டுக்காடு, கோவளம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன. வடக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ரஷியாவிலும் உள்ள பறவைகள் இந்தியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட தெற்காசிய பகுதிக்கு வலசை போகும் வழியில் மிகவும் இன்றியமையாத ஓய்விடமாக இப்பகுதி உள்ளது. இப்பகுதியை காப்பது பறவைகளையும் சுற்றுச்சூழலையும் காப்பதற்கான இன்றியமையாத தேவை ஆகும்.

எனவே, கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிக்கு வரும் பறவைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, வேடந்தாங்கல் பகுதியில் நடைமுறைபடுத்தப்படும் அனைத்து விதிகளையும் இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com