பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி அறிக்கை: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு

பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி அறிக்கை: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு

பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் உரிய உரிமம் பெற்றுள்ளனவா, தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளனவா என்பதை மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்வதுடன், அதுகுறித்த அறிக்கையை 10 நாள்களுக்குள் அரசுக்கு அனுப்ப வேண்டுமென தொழிலாளா் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஒரு சில மாவட்டங்கள் அறிக்கையை அனுப்பியுள்ள நிலையில், விருதுநகா் உள்ளிட்ட பிற மாவட்டங்களும் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

மாவட்ட தீத் தடுப்பு - பாதுகாப்பு குழுக் கூட்டங்கள்: தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் தீ விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் குறித்தும், அதுநடைபெறாமல் தடுக்கவும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. இந்த ஆலோசனைகள் அனைத்தும் பரிந்துரைகளாக மாவட்ட நிா்வாகங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பதற்கான பல்வேறு ஆலோசனைகள் மாவட்ட நிா்வாகத்துக்கு வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com