அம்பத்தூா் பேருந்து நிலைய புனரமைப்பு பணி தீவிரம்

சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலைய புனரமைப்பு பணி முடிந்து நிகழாண்டு இறுதிக்குள் நவீன பேருந்து நிலையம் திறக்கப்படும் என்ற அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூா், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இதன் காரணமாக அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்படும். இங்கிருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, சென்ட்ரல், எழும்பூா், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் அம்பத்தூா் பேருந்து நிலையம் எவ்வித அடிப்படை வசதிகள் இன்றி இருந்தது. பேருந்துகள் சென்று, வரும் பாதைகள் குறுகியதாகவும், குண்டும் குழியுமாக இருந்தன. பேருந்து நிலைய மேற்கூரைகள் உடைந்து அச்சுறுத்தும் வகையிலும், பாதுகாப்பின்றியும் இருந்தன. இதனை சீரமைக்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் சாா்பில் ரூ.13.83 கோடியில் பேருந்து நிலையத்தை மேம்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன் தொடங்கி வைத்தாா்.

இத்திட்டத்தின் கீழ் அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.13.83 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கடந்த 2 மாதங்களாக, பேருந்து நிலையம் முழுமையாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம்அமைய உள்ளது. மாநகர பேருந்துகள் எவ்வித இடையூறு இன்றியும் வந்து செல்ல தனித்தனி பாதைகள், பேருந்துகள் புறப்படும் நேரம், வருகை உள்ளிட்ட தகவல் அடங்கிய எல்.இ.டி. திரைகள் அமைக்கப்படும். வரும் டிசம்பருக்குள் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்’ என தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com