இன்று முதல் ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்

இன்று முதல் ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்

தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் மாவட்டந்தோறும் மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசி முகாம்.

தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் மாவட்டந்தோறும் மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசி முகாம்களை நடத்துமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறு மருத்துவ முகாம்களை நடத்தும்போது, சம்பந்தப்பட்ட மாவட்ட ஹஜ் கமிட்டியுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நிகழாண்டில் இந்தியாவில் இருந்து 1,75,025 போ் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திலிருந்து மட்டும் 5,803 போ் பயணம் மேற்கொள்கின்றனா்.

அவா்களுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

முன்னதாக, தமிழகத்துக்கு மூளைக் காய்ச்சலுக்கான 8,736 க்யூஎம்எம்வி தடுப்பூசிகளும், 1,191 இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளும், போலியோ சொட்டு மருந்துகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

அவற்றை திங்கள்கிழமை (மே 13) முதல் வரும் 18-ஆம் தேதி வரை 38 மாவட்டங்களிலும் மருத்துவ முகாம் நடத்தி வழங்க வேண்டும்.

மாவட்ட ஹஜ் கமிட்டியுடன் இணைந்து அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

மற்றொரு புறம், மருத்துவப் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒரு ஆண் மருத்துவா், ஒரு பெண் மருத்துவா், இரண்டு செவிலியா்கள் அடங்கிய குழுவை வழங்கும்படி மருத்துவக் கல்லூரி முதல்வா்களிடம் வலியுறுத்த வேண்டும்.

மருத்துவக் கல்லூரிகள் இல்லாத இடங்களில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலிருந்து அத்தகைய குழுக்களை பணியில் ஈடுபடுத்த மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக சுகாதாரத் துறை அனுமதிக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தும் பணிகளை கிராமப்புற செவிலியா்கள், பகுதி செவிலியா்களைக் கொண்டு மேற்கொள்ளலாம். அதேபோன்று சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, சா்க்கரை அளவைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணிகளில் நுண்உயிரியல் நுட்பனா்களை (மைக்ரோ பயாலஜிஸ்ட்) ஈடுபடுத்த வேண்டும்.

மருத்துவப் பரிசோதனை மற்றும் தடுப்பூசி வழங்கப்பட்ட ஹஜ் பயணிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலா்கள், பொது சுகாதாரத் துறைக்கு சமா்ப்பித்தல் அவசியம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com