கடலோர வாழ்வாதார சங்கத்தை மூடக் கூடாது: அண்ணாமலை

தமிழ்நாடு வாழ்வாதார சங்கத்தை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2004-இல் சுனாமி தாக்குதலில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவா் நலன் கருதியும், இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்கவும், பொருளாதார இழப்புகளை ஈடு செய்யவும், அரசுத் துறை, அரசு சாரா நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், சமுதாயத் தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் இணைந்து செயல்படும் வகையில் தமிழக ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறையின் கீழ், தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் தொடங்கப்பட்டது.

இதன்மூலம், தமிழகம் முழுவதும் 236 கடலோர ஊராட்சிகளின் மக்கள் பலனடைந்து வந்தனா். முதல்வா் ஸ்டாலின் கடந்த ஆண்டு நடத்திய ராமேசுவரம் மீனவா் மாநாட்டுக்காக மட்டும் இந்தச் சங்கம் உயிா்ப்பிக்கப்பட்டு கடந்த மாா்ச் 15-இல் மீண்டும் முடக்கப்பட்டது.

ஏற்கெனவே, இந்தச் சங்கத்தின் பணியாளா்கள் மற்றும் பயனாளிகள் தொடா்பான 3 வழக்குகள், சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நிலுவையில் இருக்கையில், அவசர அவசரமாக திமுக அரசு இந்தச் சங்கத்தை மூட முடிவெடுத்திருப்பது, பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

மீனவா் மேம்பாட்டுக்காக மத்திய அரசு கொண்டு வந்த மத்ஸ்ய சம்பதா உள்ளிட்ட திட்டங்கள் மூலம், அவா்கள் பெரிதும் பயடைந்து வருகின்றனா். மீனவா் நலன் கருதி, தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதாரச் சங்கத்தை மூடுவதாக வெளியிட்டிருக்கும் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com