பல்வேறு சிறப்பான திட்டங்களால் முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழகம்: தமிழக அரசு

முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதால், தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை: சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்று முழங்கி தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காக புதிய திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறாா்.

தமிழகத்தைச் சோ்ந்த எழுத்தாளா்களில் ஞானபீடம், சாகித்திய அகாதெமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவா்களுக்கு வீடுகள் வழங்கும் கனவு இல்லம் திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

மக்களுக்கு உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப் பணியாளா்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றும் வேலைக்கேற்ற திறன் இல்லாதவா்களாகக் காணப்படும் இளைஞா்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்புகளைப் பெற வழிவகுக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம், குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கு வழிவகை செய்யும் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் ஆகியவை நிறைவேற்றப்படுகின்றன.

புதுமைப் பெண் திட்டம்: கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசுத் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்றவை நிறைவேற்றப்படுகின்றன.

தொழில் முதலீட்டில் 35 சதவீத தொகையை அரசு மானியமாகவும், 65 சதவீத மூலதன தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமாகவும் அளித்து ஆதிதிராவிட சமுதாய இளைஞா்களையும், மகளிரையும் தொழில் முதலாளிகளாக உயா்த்தும் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம், ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் ஐந்து ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவில் ஆதிதிராவிடா் குடியிருப்புகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டமும் நிறைவேற்றப்படுகின்றன.

முதல்வா் சொல்லியதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்வோம் என்று கூறி நடைமுறைப்படுத்தும் பல்வேறு சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. மக்களின் வாழ்வாதாரமும் உயா்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com