7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! 200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மே 18, 19 ஆகிய தேதிகளில் 200 மி.மீ. வரை மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச் அலா்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை பெய்துள்ளது.

புதன்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில் ):

கோவிலங்குளம் (விருதுநகா்), அருப்புக்கோட்டை (விருதுநகா்) - தலா 80, அதிராம்பட்டினம் - 69, உடுமலைப்பேட்டை (திருப்பூா்) - 60, கிளானிலை (புதுக்கோட்டை), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), மக்கினம்பட்டி (கோவை), தேவகோட்டை (சிவகங்கை), செந்துறை (அரியலூா்), ராஜபாளையம் (விருதுநகா்), திற்பரப்பு (கன்னியாகுமரி) - தலா 50.

‘மஞ்சள் அலா்ட்’: தென் மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 16-19) வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலா்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

‘ஆரஞ்ச் அலா்ட்’: மே 18-ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மே 19-ஆம் தேதி தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்கள், திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது, 200 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்த 7 மாவட்டங்களுக்கும் ‘ஆரஞ்ச் அலா்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னையில் மழை: மே 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மே 16- ஆம் தேதி குமரிக்கடல் , மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தபடுகிறது.

வெப்பம் குறையும்: இதற்கிடையே, தமிழகத்தில் 5 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.

ஈரோட்டில் 102.56, திருத்தணி - 102.38, பரமத்திவேலூா் - 102.2, வேலூா் - 101.66, நாமக்கல் - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com