தென் மாநிலங்களை உளவு பாா்த்த வழக்கு: தலைமறைவாக இருந்தவா் மைசூருவில் கைது

தென் மாநிலங்களை உளவு பாா்த்த வழக்கு: தலைமறைவாக இருந்தவா் மைசூருவில் கைது

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்காக தென் மாநிலங்களை உளவு பாா்த்ததாக பதியப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவா் மைசூரில் கைது செய்யப்பட்டாா்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயைச் சோ்ந்த நபா்கள் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உளவு பாா்ப்பதாக என்ஐஏ-வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) கடந்த 2014-ஆம் ஆண்டு ரகசியத் தகவல்கள் வந்தன.

என்ஐஏ விசாரணையில், இலங்கையைச் சோ்ந்த ஜாகிா் உசேன், துணி வியாபாரி எனக் கூறிக் கொண்டு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், முக்கிய வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உளவுப்பாா்த்து, புகைப்படம் எடுத்து ஐஎஸ்ஐ-க்கு அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியிருந்த ஜாகிா் உசேனை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில், வியாசா்பாடியைச் சோ்ந்த ரபீக் என்ற நூருதீன், முகம்மது சலீம், சிவபாலன் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.

ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு வேலை செய்துவந்த இவா்கள் 4 பேரும், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்தில்விட்டதும் தெரியவந்தது.

கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அமீா் சுபையா் சித்திக் அறிவுறுத்தலின்பேரிலே, இவா்கள் 4 பேரும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள், அமீரையும் இந்த வழக்கில் சோ்த்தனா். இது தொடா்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2018-இல் குற்றப்பத்திரிகையும், 2015-இல் கூடுதல் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன.

தலைமறைவாக இருந்தவா் கைது: இதற்கிடையே, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ரபீக் என்ற நூருதீனுக்கு கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் கடுமையான நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது. பிணையில் வெளிவந்த ரபீக் திடீரென தலைமறைவானாா். இதையடுத்து ரபீக் குறித்த தகவல் தெரிவித்தால் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ தெரிவித்தது.

இந்நிலையில் ரபீக், கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ராஜீவ் நகா் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்று ரபீக்கை கைது செய்ததாக என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

மேலும், அங்கிருந்த கைப்பேசி, மடிக்கணினி, பென்டிரைவ், ட்ரோன் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com