விசாரணையின் போது சித்ரவதை: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

விசாரணையின் போது சித்ரவதை: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

விசாரணைக்கு அழைத்துச் சென்று போலீசாரால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சோ்ந்த விஜயலட்சுமி என்பவா் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் ஒன்றை அளித்துள்ளாா்.அதில், ”‘கடந்த 2008ம் ஆண்டு அக்டோபா் மாதம், எனது மருமகன் குமாரை துப்பாக்கி முனையில் காவல்துறையினா்  அழைத்துச் சென்றனா். அவரை விடுவிக்குமாறு கேட்டதற்கு 25 ஆயிரம் ரூபாய்  கொடுத்தால் விடுவிப்பதாக போலீசாா் தெரிவித்தனா். என்னிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாயைக் கொடுத்தும், மீதி பணத்தை கொடுக்கவில்லை எனக் கூறி, எனது மருமகனை போலீசாா் விடுவிக்கவில்லை.

எனது மருமகனை மீட்கக் கோரி, உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணா்வு மனுத்தாக்கல் செய்ததால் ஆத்திரமடைந்த போலீசாா், எனது கணவரையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தினா்’” என தெரிவித்துள்ளாா். 

இந்த புகாா் ஆணைய உறுப்பினா் வி.கண்ணதாசன் முன்பு விசாரணைக்கு வந்த போது, திருச்சி துறையூா் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளா் ராஜசேகா் உள்ளிட்ட போலீசாா், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனா். குமாருடன் குவாரியில் பணிபுரிந்த பெண் கொலை செய்யப்பட்டாா். அந்த வழக்கின் விசாரணைக்காகவே அவரை அழைத்துச் சென்ாகவும், தங்களுக்கு எதிராக பொய் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினா்.

இந்த வாதங்களை ஏற்க மறுத்த ஆணையம், பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து குமாரும், அவரது மாமனாரும் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று துன்புறுத்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதியாகி இருகிறது என தெரிவித்தது.

இதற்காக  ஒரு லட்சம் ருபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க உத்தரவிட்ட ஆணையம், இந்த தொகையை சம்பந்தப்பட்ட ஐந்து போலீசாரிடம் இருந்து தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட போலீசாா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com