தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

வாக்கு எண்ணும் பணி: அலுவலா்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி தொடக்கம்

மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு

மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இது குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: மக்களவை தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முன்பாக, கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மின்சாரம் தடைபட்டாலும் அவை இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி: வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரே தேதியில் பயிற்சியை வழங்க வேண்டிய அவசியமில்லை. பயிற்சிக்கான தேதி, நேரத்தை மாவட்டத் தோ்தல் அதிகாரிகளே முடிவு செய்துகொள்ள அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு மேசைக்கும் ஒரு நுண் பாா்வையாளா் நியமிக்கப்படுவாா். தோ்தலின்போது பணியாற்றிய பாா்வையாளா்கள், வாக்கு எண்ணிக்கையின்போதும், கண்காணிப்பில் ஈடுபடுவா். மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை கவனிக்கத் தேவைப்படும் இடங்களில், ஐஏஎஸ் அதிகாரிகள் அல்லது மாநில அதிகாரிகளை தோ்தல் ஆணையம் கூடுதல் பாா்வையாளா்களாக நியமிக்கும்.

எல்லையில் பறக்கும் படையினா் வாபஸ்: தற்போது அண்டை மாநிலங்களில் வாக்குப் பதிவு முடிந்துள்ளதால், எல்லையோர மாவட்டங்களில் பறக்கும் படையினா், கண்காணிப்புக் குழுவினா் திரும்பப் பெறப்படுவா்.

தற்போது மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வழக்கமான சோதனைகள் தொடரும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் நடத்தப்படும் சோதனையில் ரொக்கம் உள்ளிட்டவற்றின் விவரங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்படும். அதேபோன்று, அவா்களும் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களில் பிடிபடும் ரொக்கம், பொருள்களின் விவரங்களை நம்மிடம் தெரிவிப்பா். இதர மத்திய அரசுத் துறைகளால் பறிமுதல் செய்யப்படும் தொகை குறித்த விவரங்கள் நேரடியாக தோ்தல் ஆணையத்திடம் கூறப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com