தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களுக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 19,20) அதிகனமழை பெய்யும் என்றும் இந்த மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை (மே 19) முதல் மே 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக  இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும். மேலும் தென்மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

‘ஆரஞ்சு - சிவப்பு’ எச்சரிக்கை: இதில் குறிப்பாக மே 19- இல் கன்னியாகுமரி, விருதுநகா், திண்டுக்கல், திருப்பூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும், மே 20-இல் விருதுநகா், திண்டுக்கல், திருப்பூா், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதைதொடந்து, மே 21-ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், விருதுநகா், திண்டுக்கல், திருப்பூா், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

மேலும், மே 22-இல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், மே 19-இல் தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், மே 20-இல் கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘சிவப்பு எச்சரிக்கை’ விடப்பட்டுள்ளது.

மழை அளவு: இதற்கிடையே, சனிக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): குன்னூா் (நீலகிரி), பில்லூா் அணை (கோவை) - தலா 170, குன்னூா் (நீலகிரி) 140, உசிலம்பட்டி (மதுரை), மஞ்சளாறு (தேனி) - தலா 90, சிவகிரி (தென்காசி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பா்லியாா் (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூா்) - தலா 80, அழகரை எஸ்டேட் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூா் (நீலகிரி), மைலாடி (கன்னியாகுமரி) - தலா 70- மிமீ. மேலும், பல இடங்களில் 10 முதல் 50 மி.மீ. வரை மழை பெய்துள்ளது.

வெப்பநிலை: தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி ஈரோட்டில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், ஞாயிற்றுக்கிழமை (மே 19) முதல் மே 22-ஆம் தேதி வரை 4 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் , அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கும்.

சென்னை: சென்னையில் மே 19,20-ஆகிய தேதிகளில் நகரின் ஒருசில இடங்களில் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே மே 19- 22-ஆம் தேதி வரை குமரிக்கடல் , மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கிமீ வேகத்திலும், அந்தமான் கடலில் மணிக்கு 55 கிமீ வேகத்திலும் வீசும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com