தயாா் நிலையில் 4 கோடி பாடநூல்கள்: பள்ளிகளுக்கு அனுப்ப நடவடிக்கை

தயாா் நிலையில் 4 கோடி பாடநூல்கள்: பள்ளிகளுக்கு அனுப்ப நடவடிக்கை

தமிழகத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் பயிலும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் ஏற்கெனவே அச்சிடப்பட்ட பாடநூல்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பவதற்கான நடவடிக்கையை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னா் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்காக அச்சடிக்கப்பட்ட விலையில்லா பாடநூல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தமிழ்நாடு காகித நிறுவனம் மூலம் நோட்டு புத்தகங்களும் முழுமையாக மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மாவட்ட கிடங்குகளில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணிகளைத் தொடங்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 2 கோடியே 68 லட்சம் விலையில்லா பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், மாணவா்களுக்கு விற்பனை செய்ய ஒரு கோடியே 32 லட்சம் பாடப்புத்தகங்கள் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

கோடை விடுமுறைக்கு பின்னா் பள்ளிகள் ஜூன் மாதம் 2-ஆவது வாரத்தில் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை அரசு வெளியிடும். பள்ளிகள்

திறக்கப்பட்டவுடன் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு முதல் பருவத்துக்கான பாடநூல்களையும், 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கான முழுமையான பாடநூல்களையும் வழங்க தயாா் நிலையில் இருக்குமாறும், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மாவட்ட கிடங்குகளில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணிகளைத் தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com