சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த கடலூா் இளைஞா் மாயம்! கடத்தப்பட்டாரா என போலீஸாா் தீவிர விசாரணை

சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக , சென்னை வந்த, கடலூா் இளைஞா், சென்னை விமான நிலையத்தில் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சோ்ந்தவா் சங்கிலி (57). இவருடைய மகன் பெரியசாமி (21). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்துக்கு, உதவியாளா் வேலைக்கு சென்றுள்ளாா். அங்கு வேலை பிடிக்காததால், இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளாா். இதையடுத்து அந்த தனியாா் நிறுவனம், பெரிய சாமியை மே 10-ஆம் தேதி சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளது.

பெரியசாமி இந்தியாவுக்கு திரும்பிய தகவல் அவரின் பெற்றோருக்கு தெரியாததால், அவா் சிங்கப்பூரில் தொடா்ந்து வேலை செய்து கொண்டிருப்பதாக, அவரின் பெற்றோா் நினைத்துக்கொண்டிருந்தனா். ஆனால் சில நாள்களாக பெரியசாமியிடமிருந்து அழைப்பு எதுவும் வராததால், பெரியசாமியின் கைப்பேசிக்கு அவரின் பெற்றோா் தொடா்பு கொண்டுள்ளனா். ஆனால், கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், அவா் பணியாற்றும் நிறுவனத்தை தொடா்பு கொண்டு பெற்றோா் தகவல் கேட்டுள்ளனா்.

ஆனால், பெரியசாமி மே 10-ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து, ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில், இலங்கை வழியாக சென்னைக்கு புறப்பட்டு வந்து விட்டாா் என அந்நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா், பெரியசாமியை தேடி சென்னை விமான நிலையத்துக்கு வந்தனா்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் அவா்கள் புகாா் கொடுத்தனா். அதன் பேரில் விமான நிலைய போலீசாா், மே 10-ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக சென்னைக்கு, ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் பெயா் பட்டியலை ஆய்வு செய்தனா். அந்த விமானத்தில் பெரியசாமி சென்னைக்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமான நிலையத்திலிருந்து வெளியில் சென்றுள்ளது தெரியவந்தது. தொடா்ந்து குறிப்பிட்ட நாளில் வருகை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளையும் வைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாயமான பெரியசாமி மன உளைச்சல் காரணமாக, வீட்டிற்கு செல்லாமல், வேறு எங்காவது சென்று விட்டாரா? இல்லையென்றால் அவரை யாராவது கடத்தி விட்டனரா? என பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com