தமிழக பாடத்திட்டத்தில் தியாகிகள் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது

உதகையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கு பெற்ற துணைவேந்தருக்கு சான்றிதழை வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி.
உதகையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கு பெற்ற துணைவேந்தருக்கு சான்றிதழை வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி.

உதகை: தமிழக பாடத் திட்டத்தில் தியாகிகள் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்களின் 2-ஆம் நாள் மாநாட்டில் ஆளுநர் ரவி பேசினார்.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாடு நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை தொடங்கியது. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

பல்கலைக்கழகங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும். பல்கலைக்கழகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் உயர் கல்வி, வேலைவாய்ப்பு , எதைப் படிக்க வேண்டும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. இதுகுறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்த அவர்களைப் பேராசிரியர்கள் வழிநடத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 50 சதவீதம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. பல கல்லூரிகளில் கெüரவ விரிவுரையாளர்கள்தான் பாடம் நடத்துகின்றனர். அரசுத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரி மாணவர்களை அனுப்புகின்றனர். இது கல்லூரி மாணவர்கள் செய்ய வேண்டிய வேலை இல்லை.

சில இடங்களில் உயர் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை பள்ளிகளின் தளவாடப் பொருள்கள் வாங்கப் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது.

தமிழகத்தில் ஆண்டுக்கு 1,500 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர். அதில் 5 சதவீத மாணவர்களே தரமிக்கவர்களாக உள்ளனர். நெட் தேர்வு குறித்து தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு அதிக விழிப்புணர்வு உள்ளது. அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. இதனால் குறைந்த அளவே தேர்ச்சி பெறுகின்றனர்.

தமிழக பாடத்திட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார் போன்ற ஒரு சில சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற தியாகிகள் மற்றும் இயக்கங்கள் குறித்து வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி தீவு போன்ற பகுதிகளுக்கு தமிழர்கள் நில உரிமையாளர்களுக்கு விற்கப்பட்டார்கள். இந்த வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டாமா? இது எனக்கு வேதனை அளிக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு குறைவாகவே உள்ளது. அதேபோல தலித் தலைவர்களைப் பற்றி அதிக வரலாறு இல்லை. ஆனால், திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது. இது மட்டுமே வரலாறு இல்லை. இதுபோன்ற வரலாற்றை மறைப்பது அவமதிப்புச் செயலாகும்.

நம் நாடு முன்னேறி வரும் நாடாக உள்ளது. மத்திய அரசின் செயல் திட்டங்கள் சிறப்பாக உள்ளன.

தமிழகத்தில் உள்ள மாணவர்கள் திறமையானவர்கள். இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு வகிப்பார்கள்.

அவர்களை நீங்கள் சரியான வழியில் வழி நடத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com