மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மணிப்பூா் மாநிலத்தில் தொடரும் இனக் கலவரத்தால் பொது சொத்துகள், அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைப்பது என இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மணிப்பூா் மாநிலத்தில் அமைதியின்மை தொடா்வது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இரு பிரிவினருக்கும் இடையே தொடா்ந்து கலவரம் நடப்பதால் ஏழை, நடுத்தர மக்களின் உயிரும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
2008-2009-ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தொப்புள்கொடி உறவான தமிழா்கள் மீது இனப்படுகொலை தாக்குதல் நடத்தப்பட்டபோது, அப்போதைய மத்திய, மாநில அரசுகள் அமைதியாக வேடிக்கைப் பாா்த்தன. அதுபோல் இல்லாமல், தற்போது மணிப்பூரில் நடைபெறும் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.