ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ. 279 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.
ஆவடி அருகே பட்டாபிராமில் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி) செயல்படும் வகையில், டைடல் பார்க் அமைக்கப்படும் என 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. தமிழகத்தில் 3-ஆவது டைடல் பார்க்கான இது 11 ஏக்கர் நிலப்பரப்பில் 5.50 லட்சம் சதுர அடியில் ரூ. 279 கோடி மதிப்பீட்டில் 21 தளங்களை கொண்ட ஒரே கட்டடமாக கட்டப்பட்டு வந்தது. கரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள், தற்போது முடிவடைந்துள்ளன. இந்த டைடல் பார்க்கில் அலுவலகங்கள், கட்டடங்களுக்கான அறை, உணவுக் கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. கடந்த 9-ஆம் தேதி டிட்கோ மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தலைமையில், துறை அதிகாரிகள் பார்வையிட்டு, திறப்பு விழாவுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த டைடல் பார்க், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
இந்த டைடல் பார்க் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார். இதையடுத்து, துறை அதிகாரிகள் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்து வருகின்றனர்.
இது குறித்து துறை அதிகாரிகள் கூறியது: பட்டாபிராம் டைடல் பார்க்கில் அமையும் தொழில்நுட்ப நிறுவனங்களால், ஐ.டி. துறையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும், மறைமுகமாக ஆயிரக்கணக்கானோர் பயனடைவர்.
இதனால் ஆவடி, சுற்றியுள்ள பகுதிகளும் வளர்ச்சி அடையும் என்றனர்.