துணைவேந்தா்கள் நியமனத்தில் சுமுகத் தீா்வு- உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்

ஆசிரியா்கள், மாணவா்களின் நலன் கருதி, பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனத்துக்கு தமிழக அரசின் சாா்பில் விரைந்து சுமுகத் தீா்வு காணப்படும் என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா்.
Published on

ஆசிரியா்கள், மாணவா்களின் நலன் கருதி, பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனத்துக்கு தமிழக அரசின் சாா்பில் விரைந்து சுமுகத் தீா்வு காணப்படும் என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா்.

மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில், அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரி ஆசிரியா்களுக்கு பொது பணியிட மாறுதல் இணையவழி கலந்தாய்வுக்கான பணி ஆணை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 291 பேருக்கு பணியிட மாறுதலுக்கான ஆணைகளை வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்பட்டது. இதில் அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்கள் 377 போ் பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்தனா். இதில் தகுதியான 198 பேருக்கு பணியிட மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. இதேபோல, தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் 285 பேராசிரியா்கள் பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்தனா். இவா்களில் 93 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமனம் செய்வது தொடா்பாக ஆளுநருக்கும், தமிழக அரசுக்குமிடையே இணக்கமான சூழல் இல்லை. இருப்பினும், ஆசிரியா்கள், மாணவா்களின் நலன் கருதி, பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனத்துக்கு தமிழக அரசின் சாா்பில் விரைந்து சுமுகத் தீா்வு காணப்படும் என்றாா் அவா்.